சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற தமிழக எம்பிக்கள் கூட்டம் நிறைவடைந்தது. மத்திய அரசு முன்னெடுக்கும் தொகுதி மறுவரையறை தொடர்பான விவகாரத்தை ஆலோசிக்கும் நோக்கில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில், திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் இதில் பங்கேற்காமல் புறக்கணித்தன.
காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் கலந்துகொண்டனர்.கூட்டம் தொடங்கும் முன் முதலமைச்சர் விஜய் அரங்கத்திற்கு வந்தபோது வெளியே காத்திருந்த பொதுமக்கள் அவரைக் கண்டதும் ஆர்ப்பரித்து வரவேற்றனர்.

உற்சாகக் கூச்சல்கள் எழுந்த நிலையில், முதலமைச்சர் பொதுமக்களைப் பார்த்து கையசைத்து பதிலளித்தார். அவரது வருகையைச் சுற்றி உருவான இந்தக் காட்சி அரங்க வளாகத்தில் தனித்துவம் பெற்றது.கூட்டத்தில் தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையக்கூடிய சூழல் உருவாகும் அபாயம் குறித்த கவலைகள் பகிரப்பட்டன.
இதையும் படிங்க: பழனி நில மோசடி விவகாரம்..! கைதான அன்வர்தீன் உயிரிழப்பு... சந்தேகத்தை கிளப்பிய நயினார்..!!
அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் எம்பிக்களுடன் முதலமைச்சர் தீவிர ஆலோசனை நடத்தினார். தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. கூட்ட முடிந்ததும் கலைவாணர் அரங்கில் இருந்து வெளியே வந்த முதல்வர் விஜய் மக்களை சந்தித்தார். முதல்வர் விஜயை கண்டதும் அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர்.
இதையும் படிங்க: "தமிழ் வழி கல்வி"..! காவலர்களுக்கான உரிமையை காப்பாற்றுங்கள்..! முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை வலியுறுத்தல்..!!