சட்டமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய ஒரு சம்பவம் தமிழ்நாடு அரசியலை அதிர வைத்துள்ளது. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினின் தேர்தல் தோல்வியை நக்கல் செய்யும் வகையில் பேசியதால் எதிர்க்கட்சியினர் கொந்தளித்தனர். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்ற வந்த முதலமைச்சர் விஜய், டாஸ்மாக் விவகாரத்தைப் பேசியபோது திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவையில் அமளியில் ஈடுபட்டனர்.
சபாநாயகர் அமைதியை ஏற்படுத்த முயன்ற நிலையில், திமுகவினர் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். "முதலமைச்சர் பேசி முடித்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதி அளிக்கப்படும்" என சபாநாயகர் உறுதியளித்தும் அவர்கள் அமைதியாகவில்லை. அமளியின் போது தவெக அமைச்சர் ராஜ்மோகன், திமுகவினர் தங்கள் மீது ஒருமையில் பேசுவதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். அவை முன்னவர் செங்கோட்டையன், திமுகவினரை அவை விதிகளைப் பின்பற்றி ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் ஆதாரத்துடன் பேச வேண்டும் எனக் குறுக்கிட்டார். இதனால் சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படிங்க: சட்டம் ஒழுங்கு குறித்து நாளை விளக்கமளிப்பார் முதல்வர் விஜய் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!
அவர்கள் வெளியேறிய பிறகு முதலமைச்சர் விஜய் ஒரு குட்டிக் கதையைச் சொல்லி பேசத் தொடங்கினார். "உங்கள் அப்பா இங்கே இருப்பார் என்று சொன்னாங்க... உங்க அப்பாவை காணோமே?" என ஸ்டாலினின் தேர்தல் தோல்வியை நக்கல் செய்யும் வகையில் பேசினார். பின்னர், "எங்களுக்கும் நக்கல் செய்யத் தெரியும்" எனக் கூறி தன் பக்கத்து நகைச்சுவையை வெளிப்படுத்தினார்.
இந்த சம்பவம் சட்டமன்றத்தை பரபரப்பாக்கியது. ஆளும் கட்சியினர் முதலமைச்சரின் பதிலடியை வரவேற்க, எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசியலில் மீண்டும் பழைய எதிர்ப்புகள் மறு உயிர்ப்பு பெற்றுள்ள நிலையில், இந்த அமளி அடுத்தகட்ட அரசியல் விவாதங்களுக்கு வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் விஜய்யின் இந்த பேச்சு சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ஒருபுறம் ஆதரவு அலைகள் எழுந்தாலும், மற்றொருபுறம் கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. தமிழ்நாட்டு அரசியலின் சூடு இன்னும் அதிகரிக்கும் வகையில் இந்த நிகழ்வு பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய்யின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்..!! யார் இவர்..??