நவம்பர் 2-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் விஜய் புதுக்கோட்டைக்கு வருகை தர உள்ள நிலையில், அவரது பயணத் திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டைக்குச் செல்வதற்குப் பதிலாக, கார் மூலம் சுமார் 50 கிலோமீட்டர் பயணம் செய்து புதுக்கோட்டைக்குச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக புதுக்கோட்டைக்கு வரும் விஜய், அங்கு ரூ.23 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. மேலும், புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கையும் திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், தற்போது உள்விளையாட்டு அரங்கை நேரடியாகச் சென்று திறந்து வைக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, திருச்சி விமான நிலையத்திலிருந்து புதுக்கோட்டைக்குக் கார் மூலம் வரும் வழியில் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரோடு ஷோ நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. விராலிமலை தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், அப்பகுதி மக்களைச் சந்திக்கும் வகையில் இந்த ஏற்பாடுகளைத் தமிழக வெற்றிக் கழகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ.42.90 கோடியில் வாட்டர் ஸ்போர்ட்ஸ் அகாடமி..! புதிய அத்தியாயம்..! முதல்வர் விஜய் தொடங்கி வைப்பு..!!
அதன்படி, திருச்சி விமான நிலையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாகப் புதுக்கோட்டைக்குச் செல்லும் முதலமைச்சர் விஜய், விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாத்தூர், மண்டையூர், சுங்கச்சாவடி, தொண்டைமான் ஊரணி, கீழனூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாகப் பயணம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் பொதுமக்களைத் திரட்டி ரோடு ஷோ நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அங்கிருந்து புதுக்கோட்டை மாநகராட்சிப் பகுதிக்கு வரும் விஜய், வானராசி பகுதியில் அமைச்சர் முகமது பர்வேஸ் தலைமையில் வரவேற்பு மற்றும் ரோடு ஷோ நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து பாலன் நகர், ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளில் ரோடு ஷோ நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஜல்லிக்கட்டுக் காளை சிலை வழியாகப் புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் வந்தடைய உள்ளார்.
மேலும், ஜல்லிக்கட்டுக் காளை சிலை அருகே அமைந்துள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரிக்குச் சென்று மாணவிகளை முதலமைச்சர் சந்திக்கவும் வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைக்கும் விஜய், அங்கிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்குச் செல்ல உள்ளார். அங்கு விழா மேடை அமைக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு மீண்டும் அதே வழியாகக் கார் மூலம் திருச்சி விமான நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து புறப்படுவார் எனப் பயணத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தப் பயணத் திட்டம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. முதலமைச்சரின் ஒப்புதலுக்காகத் திட்டம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருடைய ஒப்புதல் கிடைத்த பின்னரே இறுதிப் பயணத் திட்டம் வெளியிடப்படும் என்றும் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அம்பாசமுத்திரத்தில் நானே போட்டி: மெர்சல் காட்டுபவர்களை பார்சல் பண்ணுவேன் சீமான் ஆவேசம்!