தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது, வீடு கட்டும் திட்டம் தொடர்பாக கடும் விவாதம் வெடித்தது. திமுக எம்எல்ஏ ஐ.பெரியசாமி, தவெக அரசு வீடு கட்டும் திட்டத்தில் பெயர்களை மாற்றி வீடுகளின் எண்ணிக்கையை குறைத்துவிட்டதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆனந்த், அந்தத் திட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளன என்பதை திட்டவட்டமாக தெரிவிப்பதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஐ.பெரியசாமி, பயனாளிகளைத் தேர்வு செய்வது அதிகாரிகள் அடங்கிய குழுவே என்றும், தவறுகள் நடப்பதற்காக திட்டத்தையே நிறுத்தக்கூடாது என்றும் வலியுறுத்தினார். கட்சி, சாதி, மத பாகுபாடு இல்லாமல் விண்ணப்பித்த அனைவருக்கும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்க முயற்சிக்க வேண்டும் எனக் கோரினார். மேலும், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி அரசுக்கு ஏற்படும் இழப்பைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் பேசினார்.
இதையடுத்து அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், சமஸ் தொகுத்த ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ புத்தகத்தை எ.வ.வேலு குறிப்பிட்டதை நினைவுகூர்ந்தார். அதேபோல், “விஜய் 100: ஊழலுக்கு எதிரான ஓர் அடி” என்ற தலைப்பில் சமஸ் எழுதிய கட்டுரையையும் சுட்டிக்காட்டினார். என்ன பேசினாலும் ஆதாரங்களைக் காட்ட வேண்டும் என எதிர்க்கட்சியினர் அடிக்கடி வலியுறுத்துவதாகக் கூறிய அவர், கடந்த ஆட்சியில் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம் என ஒப்புக்கொண்ட ஐ.பெரியசாமிக்கு நன்றி தெரிவித்தார்.
இதையும் படிங்க: "இன்னோவா கார் குடுத்தா நல்லா இருக்கும்".. MLA சண்முகம் பேச்சால் பேரவையில் சிரிப்பலை..!

இறுதியாக முதலமைச்சர் விஜய் பேசும்போது, முந்தைய ஆட்சியில் மூன்று துறைகள் குறித்து ஆய்வு செய்த அறிக்கைகள் தனது மேஜையில் உள்ளதாகத் தெரிவித்தார். நிதியமைச்சர் கூறியதுபோல் கோப்புகள் தன்னிடம் இருப்பது உண்மை என்றும், ஆதாரங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். “அந்தக் கோப்புகளை இப்போதே திறக்க வைத்துவிடாதீர்கள். எப்போது தேவையோ அப்போது திறப்போம்” என எச்சரித்தார்.
மக்களிடம் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதைத் தான் நன்கு அறிந்திருப்பதாகவும், பேசிவிட்டுத்தான் வந்துள்ளதாகவும் அவர் கூறினார். “நான் பேசுவேன். ஆனால் இடைத்தேர்தலிலாவது சிலருக்கு நல்லது நடக்க வேண்டும் இல்லையா?” என கேள்வி எழுப்பினார். முடிவில் ஐ.பெரியசாமி, தான் அன்பாகவும் அக்கறையாகவும் ஆசையாகவும் பேசியதால் மக்கள் தன்னை ஏழு முறை எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுத்ததாக நினைவுகூர்ந்தார். இவ்வாறு சட்டசபையில் வீட்டுவசதி திட்டம் தொடர்பான விவாதம் முடிவடைந்தது.
இதையும் படிங்க: அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கார், எரிபொருள், உதவியாளர்... எதிர்க்கட்சிக்கும் சேர்த்து வாரி வழங்கிய சி.எம். விஜய்...!