தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, நிர்வாக பணிகளில் முதல்வர் விஜய் கடைப்பிடித்து வரும் வேகமான செயல்பாடு அரசு அதிகாரிகள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, தினமும் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்படும் கோப்புகளை அதே நாளில் பரிசீலித்து கையெழுத்திட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு திருப்பி அனுப்பும் நடைமுறை அதிகாரிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவலின்படி, முதல்வர் விஜய் தினமும் காலை 9.30 முதல் 10 மணிக்குள் தலைமைச் செயலகம் வந்து, மாலை 6 மணி வரை அரசு பணிகளில் முழு நேரமும் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு துறைகளின் செயலர்கள் மற்றும் அமைச்சர்களின் அலுவலகங்களில் இருந்து திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், நிர்வாக அனுமதிகள் உள்ளிட்ட கோப்புகள் தினமும் முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பப்படுகின்றன.
அந்த கோப்புகளில் பெரும்பாலானவற்றை முதல்வர் அதே நாளிலேயே ஆய்வு செய்து, தேவையான ஒப்புதலை வழங்கி மாலைக்குள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறப்படுகிறது. இதனால், முன்பு நாட்கள் கணக்கில் நிலுவையில் இருந்த கோப்புகள் தற்போது சில மணி நேரங்களிலேயே முடிவுக்கு வருகின்றன என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ஜெயலலிதா பாணியை பின்பற்றுங்கள் CM விஜய்!! என்.எல்.சி பங்குகள் விற்பனை! எடப்பாடி பழனிசாமி அட்வைஸ்!

மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கூறுகையில், கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் உள்ளிட்ட பல முதல்வர்களுடன் பணியாற்றிய அனுபவம் இருப்பதாகவும், ஆனால் முதல்வர் விஜயின் பணிமுறை சற்று வித்தியாசமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அரசு நிர்வாக பணிகளுக்கு முழு நேரம் ஒதுக்குவதால் கோப்புகள் விரைவாக முடிவு பெறுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், துறைகளின் அமைச்சர்களும் கோப்புகளை விரைந்து பரிசீலித்து ஒப்புதல் வழங்குவதால் நிர்வாக பணிகளில் தாமதம் குறைந்துள்ளதாகவும், அதிகாரிகளுக்கும் முடிவெடுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அரசு திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்படும் சூழல் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
எனினும், கமிஷன் தொடர்பான தாமதங்கள் குறைந்துள்ளதாகவும், கோப்புகள் விரைந்து நகர்வதாகவும் கூறியிருப்பது அந்த அதிகாரியின் தனிப்பட்ட மதிப்பீடாகும். இதுகுறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், கோப்புகள் விரைவாக பரிசீலிக்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் அரசு நிர்வாகத்தில் புதிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: போதைப்பொருள் பயன்படுத்தினாரா அமைச்சர் சரத்குமார்?! உளவுத்துறை வாயிலாக CM விஜய் ரகசிய விசாரணை!