கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரை மாதவிடாய் என்பதை காரணம் காட்டி வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வாசலிலேயே அமர வைத்து தேர்வு எழுத சொல்லுவதாக தனியார் பள்ளி மீது குற்றம் சாட்டப்பட்டது.

அந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் பூப்பெய்திய நிலையில், அவர் முழு ஆண்டு தேர்வை எழுத வேண்டும் என்பதற்காக பெற்றோர் அனுமதி கேட்டுள்ளனர். தேர்வு எழுத அனுமதி வழங்கிய போதும், மாணவியை வகுப்பறைக்கு வெளியே உள்ள படிக்கட்டில் அமர செய்து தேர்வு எழுத வைத்துள்ளனர். இதனால் மாணவி மிகுந்த மனஉளைச்சல் அடைந்துள்ளார்.
இதையும் படிங்க: தூக்கியடிக்கப்பட்ட அன்புமணி... ராமதாஸை தூண்டிவிட்டது இவரா? - பாகவினர் ஷாக்!
சம்பவம் தொடர்பாக மாணவியின் தாயார் சென்று கேட்டபோது பள்ளி நிர்வாகம் அலட்சியமாக பதில் கூறியதாக தெரிகிறது. இதனை அடுத்து மாணவியின் தாய், செல்போனில் பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கடும் கண்டனம் எழுந்தது. மேலும், வகுப்பறையில் தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைப்பதாக கூறிவிட்டு, வகுப்பறைக்கு வெளியில் அமர வைக்கப்பட்டதாக தலைமை ஆசிரியை மீது புகார் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, பொள்ளாச்சி உதவி போலீஸ் சூப்பிரண்டு சிருஷ்டி சிங், நெகமம் காவல் ஆய்வாளர் பானுமதி தலைமையிலான போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், மாவட்ட பள்ளிக்கல்வித்துறை உதவி இயக்குனர் வடிவேலுவும் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக பள்ளியின் முதல்வர் ஆனந்தியை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்த நிலையில், பள்ளியின் தாளாளர் தங்கவேல் பாண்டியன், முதல்வர் ஆனந்தி, அலுவலக உதவியாளர் சாந்தி ஆகியோர் மீது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பங்குனி உத்திரம்.. முருகன் கோவில் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்.. அறுபடை வீடுகளில் குவிந்த பக்தர்கள்..