தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்துள்ள நிலையில், அமைச்சரவையில் பங்கேற்குமாறு காங்கிரசுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்துத் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் திரு. கிரிஷ் ஜோடங்கர் இன்று முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ள சூழலில், காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடமளிக்க முதலமைச்சர் விஜய் முன்வந்துள்ளார். தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற வேண்டும் எனத் தவெக அழைப்பு விடுத்துள்ளதை கிரிஷ் ஜோடங்கர் உறுதி செய்துள்ளார்.

காங்கிரசுக்கு எத்தனை அமைச்சர் பதவிகள் மற்றும் எந்தெந்த துறைகள் ஒதுக்கப்படும் என்பது குறித்துத் தவெக தலைமையுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் அமைச்சரவையில் இணைந்தால், சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
இதையும் படிங்க: போதை பொருள் விற்றால் குண்டர் சட்டம்! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எச்சரிக்கை!
அமைச்சரவையில் சேருவது மற்றும் அமைச்சர்களின் எண்ணிக்கை குறித்து டெல்லி மேலிடம் இறுதி முடிவு எடுக்க உள்ளது. ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருடன் ஆலோசித்த பிறகு, அமைச்சரவையில் சேருவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக அரசுக்கு ஆதரவளித்துள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களில் யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது என்பது குறித்தும் ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளன. ஏற்கனவே தவெக அமைச்சரவையில் 10 அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இணைந்தால் அமைச்சரவை மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சி.வி.சண்முகம் ஆதரவு விஜய்க்கு தேவையில்லை! கார்த்தி சிதம்பரம் எம்.பி அதிரடி!