கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த அசோக்குமார்–கௌசல்யா தம்பதியினரின் இளைய மகன் அகிலன் (15). இவர் கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் அரசு உதவி பெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஆயுத பூஜை தொடர் விடுமுறை முடிந்து நேற்று காலை அகிலன் வழக்கம்போல் பள்ளிக்குக் கிளம்பியுள்ளார். அதேபோல், அவரது தாயார் கௌசல்யா அருகிலுள்ள வீட்டில் வேலைக்குச் சென்றுள்ளார். அவரது அக்காவும் பள்ளிக்குச் சென்றுள்ளார். தந்தை அசோக்குமார் கேரள மாநிலம் மூணாறில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கௌசல்யா மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்தபோது, வீடு திறந்திருப்பதைக் கவனித்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது, அகிலன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: பேஷ்! பேஷ்! அறிவுலகத்திற்கே லீவு விட்ட அறிவார்ந்த ஆட்சி தவெக ஆட்சி! TRB ராஜா கடும் தாக்கு..!!
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் கோவை பீளமேடு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அகிலனின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, உயிரிழந்த மாணவனின் பெற்றோர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில், பள்ளி வகுப்பறையில் உதவித்தொகை தொடர்பான தகவல்களைக் கேட்கும்போது, மாணவர்களின் சாதி குறித்தும், மாட்டிறைச்சி சாப்பிடுவது குறித்தும் ஆசிரியர் கேட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த பிற மாணவர்கள் அகிலனிடம் பேசுவதைத் தவிர்த்ததாகவும், இதனால் மாணவர் அகிலன் மனவருத்தத்தில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து மாணவனின் தந்தை அசோக்குமார் கூறுகையில், கோவை அரசு உதவி பெறும் பள்ளியில் தனது மகனின் சாதி அடையாளம் குறித்து தெரிந்துகொண்ட பிறகு, சக மாணவர்கள் அவரிடம் பேசுவதைத் தவிர்த்ததாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பள்ளியில் புகார் அளித்தபோது, அப்படி எதுவும் இல்லை என்றும், விசாரிப்பதாகவும் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், பள்ளி ஆசிரியர்கள் சாதிய மனப்பான்மையுடன் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டிய அவர், தனது மகன் அகிலனின் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், தற்கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இல்லையெனில், மாணவனின் உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
பெற்றோர் மற்றும் உறவினர்கள் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், மாணவனின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் கால் வைத்ததுமே விஜய் செய்த செயல்... நெகிழ்ந்து போன முன்னாள் ரசிகர் மன்ற நிர்வாகி...!