கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் நேற்று நடந்த கொலை சம்பவத்தில் டாஸ்மாக் கடையில் வரிசையில் நிற்கும் போது யார் முன் செல்வது என்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஆனால் இன்று கஞ்சா விற்பதை காட்டி கொடுத்ததால் நண்பனை கொலை செய்ததாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி - பெரம்பலூர் பகுதியில் சேர்ந்த தேவதாஸ்(35) என்பவர் திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கருமத்தம்பட்டி அருகே சோமனூர் டாஸ்மாக் கடைக்கு வந்த நிலையில் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தேவதாசை கொலை செய்ததாக கஞ்சா வியாபாரிகள் இருவரை நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரிக்கையில் அவர்கள் கரவழி மாதப்பூர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மகன் ரஞ்சித் (24) எனவும் சோமனூர் செல்வபுரம் காலனி பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் அசோக் என்கின்ற முருகவேல் (20) என்பதும் தெரியவந்தது .இவர்கள் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதை வாடிக்கையாக செய்து வந்துள்ளனர் .
இதையும் படிங்க: கோவை மாணவனுக்கு நடந்தது என்ன?... முதல் தகவல் அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்..!
கொலை செய்யப்பட்ட தேவதாஸ் கொலையாளிகளின் நண்பர் என கூறப்படுகிறது. நண்பர்கள் கஞ்சா விற்பது பிடிக்காததால் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பாகவே தேவதாசைத் தாக்கி கொலை செய்ய தஞ்சாவூர் வியாபாரிகள் அசோக் மற்றும் ரஞ்சித் முயன்றுள்ளனர்.
அதிலிருந்து தப்பித்த தேவதாஸ் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைக்கு வரும்போது கஞ்சா வியாபாரிகள் ரஞ்சித் மற்றும் அசோக் ஆகியோர் கண்ணில் பட்டுள்ளார். அப்போது அவர்கள் தேவதாசை பின் தொடர்ந்து சென்று அவர்கள் தயாராக வைத்திருந்த கத்தியால் குத்தி கொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொலை தொடர்பாக கொலையானவர் மற்றும் கொலையாளிகள் ஆகியோர் பெயர்களை மட்டும் வெளியிட்ட போலீசார் கொலை தொடர்பாக எந்த தகவல்களையும் யாரிடமும் பகிரக் கூடாது என உயரதிகாரிகள் உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். கோவையில் கஞ்சா விற்பனையை காட்டி கொடுத்ததாக ஏற்கனவே கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட நிலையில் இரண்டாவதாக சோமனூரில் தேவதாஸ் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிய வருகிறது.
இதையும் படிங்க: #BREAKING கோவையில் அடுத்தடுத்து அதிர்ச்சி... பெண் அடித்துக்கொலை... நடந்தது என்ன?