மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் சண்முகம் இன்று வெள்ளத்தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை தொடர்பான முக்கிய கருத்தை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படுவதும், அதையொட்டி வெள்ளத்தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து தீவிரமாக விவாதிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சென்னையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக திருப்புகழ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
ஆனால் அந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்று சண்முகம் குறிப்பிட்டார். கடந்த காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இந்த அறிக்கையை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளன. இடைக்கால அறிக்கைகள் உட்பட மூன்றுக்கும் மேற்பட்ட அறிக்கைகளை இந்த குழு சமர்ப்பித்துள்ளதாகத் தெரிகிறது.

அறிக்கையில் பல்வேறு கார்ப்பரேட் பெருநிறுவனங்கள் மற்றும் வசதிபடைத்தோரின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது முக்கியமானது என்று கூறப்பட்டிருப்பதால், இந்த அறிக்கை வெளியிடப்படாமல் தடை செய்யப்பட்டிருக்கிறதோ என்ற கேள்வியும் எழுவதாக அவர் தெரிவித்தார். கடந்த திமுக ஆட்சியில் வெளியிடப்படாத அந்த அறிக்கையை தற்போதைய ஆட்சியிலாவது வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: "தவெக அரசை சீர்குலைக்க அதிகாரிகள் முயற்சி"..! வைகோ பகீர் குற்றச்சாட்டு..!
மக்களின் வரிப்பணத்தை செலவழித்து நிபுணர்கள் தங்கள் உழைப்பையும் அறிவையும் செலுத்தி உருவாக்கப்பட்ட ஒரு அறிக்கையை வெளியிடுவதற்கு என்ன தடை இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய சண்முகம், மாநில அரசாங்கம் உடனடியாக திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட்டு, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துவதாகத் தெரிவித்தார். இது மிகவும் அவசரமானதும் அவசியமானதுமான தேவை என்று அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: பள்ளியில் ஒடுக்குமுறை..! தவெக ஆட்சியில் தொடரும் அவலம்..!! நயினார் காட்டம்..!!