சிவகங்கை அருகே மேலமங்கலத்தில் பிரபல ரவுடி சுள்ளான் மதன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் கொலை மிரட்டல் பதிவுகளை வெளியிட்ட ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களைச் சிவகங்கை மாவட்டக் காவல்துறை அதிரடியாக முடக்கியுள்ளதுடன், இக்கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி இரட்டைக் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய புதுப்பட்டியைச் சேர்ந்த சுள்ளான் மதன், கடந்த சில தினங்களுக்கு முன்பு வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியைப் பார்க்க வந்த இடத்தில் கரும்புத் தோட்டத்திற்குள் மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதன் தொடர்ச்சியாகச் சமூக வலைதளங்களில் ஒருசில நபர்கள் மற்றும் குழுக்கள் வன்முறையைத் தூண்டும் வகையிலும், பழிவாங்கும் நோக்குடனும் மிரட்டல் பதிவுகளைப் பதிவேற்றி வந்தனர்.

இத்தகைய சட்டவிரோதச் செயல்களைத் தீவிரமாகக் கண்காணித்த சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் மற்றும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீசார், சட்டம்-ஒழுங்கு பிரச்சனையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும் வகையில் மிரட்டல் வீடியோக்கள் மற்றும் பதிவுகளைப் பகிர்ந்த பல்வேறு ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை அடையாளம் கண்டு உடனடியாக முடக்கியுள்ளனர்.
இதையும் படிங்க: விபி-ஜி ராம்-ஜி திட்டம்: 25 நாட்கள் கூடுதல் வேலை, ரூ. 100 கோடி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு!
மேலும், சமூக வலைதளங்கள் மூலம் வன்முறையைத் தூண்டுவோர், கொலை மிரட்டல் விடுப்போர் மற்றும் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் பதிவுகளைப் பரப்புவோர் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் சட்டப்படி பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவகங்கை மாவட்டக் காவல்துறை மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, தலைமறைவாக உள்ள கொலைக் குற்றவாளிகளை எல்லைப் பகுதிகள் மற்றும் அண்டை மாவட்டங்களில் வலைவீசிப் பிடிக்க 6 தனிப்படைகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகவும், மிக விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுரை: தனுஷ் ரசிகர்களின் இலவச ஆட்டோ சேவை.. அரசியல் ஊகங்களை மீண்டும் தூண்டும் நற்பணி..!!