வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு வங்கதேசம் பரிந்துரைத்த அர்னாப் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
வங்க மொழியில் அர்னாப் என்பதற்கு கடல் என்று பொருள்.புயல் தற்போது மணிக்கு சுமார் பதினைந்து கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது இன்று நள்ளிரவுக்குள் தீவிர புயலாகவும், நாளை மிகத் தீவிர புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது. அக்டோபர் இருபத்தெட்டாம் தேதி முற்பகலில் ஆந்திரப் பிரதேசத்தின் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையேயான கடற்கரையை அதிதீவிர புயலாக கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது காற்றின் வேகம் மணிக்கு நூற்றுப் பதினைந்து முதல் நூற்று இருபத்தைந்து கிலோமீட்டர் வரையும், அதிகபட்சமாக நூற்று நாற்பது கிலோமீட்டர் வரையும் இருக்கலாம்.இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING “வந்துட்டான்யா... வந்துட்டான்யா...” - உருவானது ‘அர்னாப் புயல்’... தமிழகத்திற்கு பேராபத்தா?
சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் இந்த எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் எண் எச்சரிக்கை என்பது புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் நிலவுகிறது என்பதைக் குறிக்கும் முன்னறிவிப்பு ஆகும். இதனால் மீனவர்கள் அக்டோபர் இருபத்தைந்தாம் தேதி முதல் இருபத்தொன்பதாம் தேதி வரை கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கரையோரங்களில் உள்ள படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING அடுத்த 48 மணி நேரத்திற்கு திக்...திக்..!! -‘அர்னாப்’புயல் ஆட்டம் ஆரம்பம்... தமிழ்நாட்டை தாக்க வாய்ப்பா?