முரசு புயல் எதிரொலி: பாம்பன், கடலூர் உள்பட 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள் ஏற்றம்!
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள முரசு புயல் எதிரொலியாக ஏழு துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள 'முரசு' புயல் தீவிரமடைந்து வருவதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாம்பன், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட 7 முக்கியத் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள தீவிரக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, தமிழகம் மற்றும் ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாகக் கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதாலும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதாலும் துறைமுகங்களுக்குத் தெளிவான வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 முக்கியத் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. அதன்படி, தூத்துக்குடி மற்றும் பாம்பன் துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது, ஆழ்கடலில் புயல் உருவாகியுள்ளது என்பதையும், கப்பல்கள் துறைமுகத்தை விட்டுப் புறப்படத் தயாராகும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையும் குறிக்கிறது.
இதையும் படிங்க: முரசு புயல் கனமழை எச்சரிக்கை: 7 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை அவசர கடிதம்!
அதேவேளையில், புயல் காற்று வீசக்கூடும் என்ற எச்சரிக்கையின் அடிப்படையில் கடலூர், காட்டுப்பள்ளி மற்றும் புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. திடீர் காற்றோடு மழை பெய்யும் அபாயம் நிலவுவதால், துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கடலோரப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பை முன்னெடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வங்கக்கடலில் உருவாகும் ‘முரசு’ புயல்..! அடுத்த 24 மணி நேரத்தில் சம்பவம் இருக்கு..! வானிலை மையம் எச்சரிக்கை..!












