சுதந்திர தின உரையில் ஜிஎஸ்டி வரி குறைப்பு எனும் தீபாவளி பரிசு காத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்த நிலையில் நேற்று ஜிஎஸ்டி வரிகள் இரு அடுக்காக குறைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், பல முக்கிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, மக்களின் வாழ்க்கை மற்றும் வணிகத்தை எளிதாக்குவதற்கு முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள், மாநில நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். முக்கிய முடிவாக, தற்போதைய நான்கு வரி அடுக்குகள் (5%, 12%, 18%, 28%) இரண்டு அடுக்குகளாக (5% மற்றும் 18%) எளிமைப்படுத்தப்பட்டன.
இதையும் படிங்க: ஜிஎஸ்டியில் 12%, 28% வரி விகிதங்கள் நீக்கம்.. நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல்..!!
ஆடம்பர பொருட்கள் மற்றும் "பாவ பொருட்கள்" (புகையிலை, பான்மஸாலா, கார்பனேற்றப்பட்ட பானங்கள்) ஆகியவற்றுக்கு 40% என்ற புதிய வரி அடுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாற்றங்கள் வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் அமலுக்கு வரும். மேலும், பொதுமக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணமாக, முடி எண்ணெய், பற்பசை, சோப்பு, சைக்கிள்கள், சமையலறைப் பொருட்கள், பால் பொருட்கள், இந்திய ரொட்டிகள் உள்ளிட்ட 175-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி 18% மற்றும் 12%-லிருந்து 5%-ஆகவும், சில பொருட்களுக்கு 0%-ஆகவும் குறைக்கப்பட்டது.
மேலும் 33 உயிர்காக்கும் மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து பூஜ்ஜியமாக குறைந்துள்ளது. இதைப்போல தனிநபர் ஆயுள், சுகாதார காப்பீடு பிரீமியத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ட்ரோன்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் 28%-லிருந்து 5%-ஆக குறைக்கப்படுவது குறித்தும், டிஜிட்டல் இன்வாய்சிங் மற்றும் தானியங்கி ஜிஎஸ்டி ரீஃபண்ட் போன்ற புதிய சீர்திருத்தங்களும் ஆலோசிக்கப்பட்டன. இந்த மாற்றங்கள், வரி விதிப்பில் வெளிப்படைத்தன்மையையும், வணிக எளிமையையும், பொதுமக்களுக்கு நிவாரணத்தையும் உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜிஎஸ்டி அமலானபோதே நானும் பொருளாதார நிபுணர்களும் எச்சரித்தோம். மக்களை கசக்கிப் பிழிந்துவிட்டு தற்போது வரியை குறைத்துள்ளனர்; 8 ஆண்டுகள் தங்களது தவறை பாஜக அரசு உணர்ந்துள்ளது என்று தெரிவித்தார். ஜி.எஸ்.டி. வரி குறைப்பு வரவேற்கத்தக்கது என்றாலும் 8 ஆண்டு கழித்து எடுத்த தாமதமான நடவடிக்கை என்றார்.

மேலும் ஜிஎஸ்டி வரியை மாற்றி அமைக்க 8 ஆண்டாக வலியுறுத்தியும் மத்திய அரசு காதுகொடுத்து கேட்டதில்லை என்ற அவர், ஜிஎஸ்டி வரி விகிதத்தை மத்திய அரசு மாற்றி அமைத்ததற்கு என்ன காரணம் மந்தமான வளர்ச்சியா அல்லது பீகார் தேர்தலா, டிரம்பும் அவரது வரிவிதிப்பும் காரணமா என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: கார், பைக் வாங்கப்போறீங்களா? - மோடி கொடுக்கப் போகும் ஜாக்பாட் பரிசை மிஸ் பண்ணிடாதீங்க...!