சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு கடுமையாகப் பாதிக்கும் என்பதைப் புள்ளிவிவரங்களுடன் விளக்கினார். கடந்த நாடாளுமன்றத் தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த முன்மொழிவை வலுவாக எதிர்த்ததை நினைவு கூர்ந்த அவர், தற்போதும் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் இந்த விவகாரத்தில் தங்களின் கடுமையான எதிர்ப்பைத் தொடரும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகக் கூறினார்.
அனைத்து மாநிலங்களுக்கும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிக்கலாம் என்று கூறப்படும் மாற்று முன்மொழிவை அவர் கடுமையாக நிராகரித்தார். தொகுதிகளை 50% உயர்த்துவது என்பது மேலோட்டமாகப் பார்க்கும்போது நியாயமாகத் தோன்றலாம். ஆனால், அது நடைமுறையில் தென் மாநிலங்களின் அரசியல் முக்கியத்துவத்தை முற்றிலும் குறைத்துவிடும். உதாரணத்திற்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்த்து தற்போது 40 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. 50 சதவீதம் உயர்த்தப்பட்டால் அது 60 ஆக மாறும். ஆனால், அதே வேளையில் உத்தரப் பிரதேசத்தின் தற்போதைய 80 தொகுதிகள் 120 ஆக உயர்ந்துவிடும்.
தற்போது தமிழகம் மற்றும் உத்தரப் பிரதேசத்திற்கு இடையேயான வித்தியாசம் 40 தொகுதிகளாக உள்ளது. இந்த மறுசீரமைப்பு நடைமுறைக்கு வந்தால் அந்த வித்தியாசம் 60 தொகுதிகளாக அதிகரிக்கும். இதனால் டெல்லி நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் அரசியல் முக்கியத்துவமும், நம் மாநிலத்தின் குரலுக்கான எடையும் பெருமளவில் குறைந்துவிடும் அபாயம் உள்ளது.
இதையும் படிங்க: அண்ணாமலையின் புதிய இயக்கம்.. வடிவேலு பாணியில் கலாய்த்த தமிழக காங்கிரஸ் தலைவர்!
உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் நாடாளுமன்றச் செயல்பாடு முடங்கும் எனக் கவலை தெரிவித்த கார்த்தி சிதம்பரம், தற்போது 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையிலேயே அனைத்து எம்பிக்களுக்கும் தங்களது தொகுதிப் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கான போதிய நேரம் கிடைப்பதில்லை. தொகுதி மறுசீரமைப்பிற்குப் பின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 800-ஐத் தாண்டினால், நாடாளுமன்றத்தின் செயல்திறன் மேலும் பாதிக்கப்படும் என்றார்.

தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சியின் மூத்த தலைவர் சுப்ரியா சுலே, 50 சதவீத தொகுதி உயர்வுக்கு ஆதரவு அளிக்கலாம் எனக் கூறியிருப்பது குறித்துக் கேட்டபோது, "கடந்த முறை நாடாளுமன்றத்தில் இதனை எதிர்த்தவர்கள், தற்போது ஆதரிப்பதாகக் கூறுவது எனக்குப் பெருத்த ஆச்சரியத்தை அளிக்கிறது. அவர் எந்த சூழ்நிலையில் அந்தக் கருத்தைத் தெரிவித்தார் என்பது எனக்குத் தெரியவில்லை என்று பதிலளித்தார்.
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு குறித்துக் கருத்து தெரிவித்த கார்த்தி சிதம்பரம், புதிய அரசு செயல்படப் போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றார்.
அரசு பொறுப்பேற்று மிகக் குறுகிய காலமே ஆகியுள்ளது. தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த பிறகே அதன் ஒட்டுமொத்த செயல்பாடுகளை மதிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும். அமைச்சரவையிலும், ஆளும் கட்சியிலும் பெரும்பாலானோர் முதல் முறையாக எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள் என்பதால், எடுத்தவுடனேயே அவர்களை விமர்சனம் செய்வது சரியல்ல. ஆட்சியின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளைப் பொறுத்திருந்து பார்த்த பிறகே மதிப்பீடு செய்ய வேண்டும்" என்றார்.
மேலும், ஆளும் கட்சி மற்ற கட்சி எம்.எல்.ஏ.க்களைத் தன்பக்கம் இழுக்க வேண்டுமா என்ற கேள்விக்கு, தவெக அரசிடம் தற்போதுள்ள பெரும்பான்மையே போதுமானது. மற்ற கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இதில் இணைவது தேவையற்றது. தற்போதைய உறுப்பினர்களைக் கொண்டே ஐந்து ஆண்டுகள் ஆட்சியை அவர்களால் வெற்றிகரமாக நடத்த முடியும் என்று குறிப்பிட்டார்.
மாநிலத்தில் நடைபெறும் குற்றங்கள் மற்றும் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்துப் பேசிய அவர், "இவை அரசாங்கத்தால் மட்டுமே உருவாகும் பிரச்சினைகள் அல்ல. குடும்பம், பள்ளி, ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இணைந்து தீர்வு காண வேண்டிய கூட்டுப் பொறுப்பாகும். எனவே, ஒவ்வொரு சமூகப் பிரச்சினைக்கும் அரசாங்கத்தை மட்டுமே குற்றவாளி கூண்டில் நிறுத்துவது சரியான அணுகுமுறை அல்ல; சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயல்பட்டால்தான் இதற்கு நீடித்த தீர்வு காண முடியும் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
இந்தியா மேற்கொண்டுள்ள புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) குறித்த கேள்விக்கு, தான் அந்த ஒப்பந்தத்தை இன்னும் முழுமையாகப் படிக்கவில்லை என்றும், அனைத்து விவரங்களையும் ஆய்வு செய்த பிறகே விரிவான கருத்து தெரிவிக்க முடியும் என்றும் கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: வீரியமெடுக்கும் காவிரி நீர் பிரச்சனை..! பாத்துட்டு சும்மா இருக்காதீங்க... செல்வப் பெருந்தகை எச்சரிக்கை..!