காவிரி விவகாரத்தில் நடத்தப்பட்டப் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜய்யை விமர்சிக்கிறோம் என்ற பெயரில் கேட்கவே கூசும் அளவிற்கு மோசமான உள்ளர்த்தம் கொண்ட கொச்சையான வார்த்தைகளைப் பேசியிருப்பது கட்சி எல்லைகளைக் கடந்து கண்டிக்கத்தக்கது என்று பாஜக மூத்த தலைவரும் தெலங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் மிகக் கடுமையானக் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் காரசாரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜன், தமிழக அரசியலில் சில தலைவர்கள் பேசும் கருத்துக்களும் விமர்சனங்களும் மிகுந்த கவலையளிப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று நடைபெற்றக் காவிரிப் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், காவிரி நீரால் விவசாயிகளுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை என்றோ, தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோகிறது என்றோ எந்தவிதமான உண்மையான அக்கறையும் கவலையும் இல்லாமல் உரையாற்றியுள்ளார். முதலமைச்சரை விமர்சிக்கிறோம் என்ற பெயரில் கேட்கவே கூசும் அளவிற்கு மோசமான மற்றும் அருவருப்பான உள்ளர்த்தம் கொண்ட வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். இத்தகைய கொச்சைப் பேச்சுக்கள் கட்சி எல்லைகளைக் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
இதையும் படிங்க: தவெக அரசை கண்டித்து தஞ்சையில் ஆகஸ்ட் 3-ல் மாபெரும் ஆர்ப்பாட்டம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

அரசியல் களத்தில் நமக்கு இடையே எவ்வளவு மாற்றுக்கருத்துகளும், மாற்றுச் சிந்தனைகளும் இருந்தாலும், எதிராளியை விமர்சிக்கும் போது சிந்தனையிலும் வார்த்தைகளிலும் ஒரு குறைந்தபட்சத் தூய்மை தேவை. சிந்தனை இவ்வளவு அழுக்காகவும் கீழ்த்தரமாகவும் இருந்தால், அது திமுகவிற்கு நிச்சயமாக நல்லதல்ல. அதேநேரத்தில், அவர்களது அரசியல் தரம் உயரும் என்று எதிர்பார்ப்பதிலும் நியாயமில்லை என்றே தோன்றுகிறது என அவர் சாடினார்.
மேலும், அரசியல் நாகரிகத்தையும் பேச்சு நாகரிகத்தையும் கடைப்பிடிப்பதே வாக்களித்த பொதுமக்கள் விரும்பும் உண்மையான பண்பாடாகும். ஆனால், பிறரை மோசமாக விமர்சித்துவிட்டுச் சிறையில் அடைக்கப்படுவதையும், ஊழல் வழக்குகளில் சிக்கிச் சிறை செல்வதையும் ஒரு மாபெரும் பெருமை என்று நினைத்துக் கொண்டிருக்கும் திமுக தலைவர்களிடம் வேறு எதைத் தான் நாம் எதிர்பார்க்க முடியும்? என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: குறுக்கு வழி ஆட்சி... பனையூர் பங்களாவில் பதுங்கல்..! உதயநிதி துணிச்சல பார்த்து இருக்கீங்களா CM சார்..? விளாசிய அப்பாவு..!