சென்னை மாநகர போக்குவரத்து கழகம் (MTC) சமீபத்தில் தனது டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் மண்டல அதிகாரிகளுக்கு கடுமையான சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மாநகர பேருந்துகளை நம்பி பயணம் செய்கின்றனர். ஆனால் பேருந்துகள் குறிப்பிட்ட நிறுத்தங்களில் நிற்காமல் செல்வது, பயணிகளிடம் முறையற்ற முறையில் நடந்துகொள்வது போன்ற புகார்கள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன.
குறிப்பாக பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் இந்தப் பிரச்சினை அதிகமாகத் தெரிகிறது. சில சமயங்களில் இரண்டு அல்லது மூன்று பேருந்துகள் ஒரே நேரத்தில் ஒரு நிறுத்தத்திற்கு வந்தாலும் எதுவும் நிற்காமல் சென்றுவிடுவதாக மக்கள் குறை கூறுகின்றனர். பேருந்தைப் பிடிக்க ஓடிவரும் பயணிகளிடம் டிரைவர்கள் அல்லது கண்டக்டர்கள் கடுமையாகப் பேசுவது, “அடுத்த பஸ்ஸில் போங்க” என்று அனுப்புவது போன்ற செயல்களும் அதிகரித்துள்ளன. இதனால் முதியவர்கள், பெண்கள், மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் எம்டிசி வெளியிட்ட சுற்றறிக்கையில், “சாதாரண கட்டணப் பேருந்துகள் அனைத்து நிறுத்தங்களிலும் தவறாமல் நிற்க வேண்டும்” எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் பல பேருந்துகள் வந்தாலும், டிரைவர்கள் பாதுகாப்பான இடைவெளியில் நிறுத்தி பயணிகளை ஏற்றவும் இறக்கவும் அனுமதிக்க வேண்டும். பெண்கள், கர்ப்பிணிகள், முதியோர், குழந்தைகளுடன் வருபவர்கள், மாணவ-மாணவியர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்க வேண்டும். பயணிகளிடம் அவமதிக்கும் வகையில் பேசுவது அல்லது ஏற்ற மறுப்பது கடுமையான ஒழுங்கீனச் செயலாகக் கருதப்படும்.
இதையும் படிங்க: பங்கேற்க தடை... இடதுசாரி கட்சிகள் தலையில் இடியை இறங்கிய விஜய்... கரப்பான் பூச்சிக்கும் மரண அடி...!
புகார் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் கிளை மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்கள் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு, ஊழியர்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்து என்பது மக்களின் அன்றாட வாழ்க்கையோடு இணைந்த அத்தியாவசிய சேவை. அதை நம்பகமானதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றுவதே அரசு நிறுவனத்தின் முதன்மைக் கடமை என்பதை இந்தச் சுற்றறிக்கை மீண்டும் உணர்த்துகிறது. பயணிகளின் நலன் காக்கும் வகையில் இந்த அறிவுரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "நமது வளம் நமது மக்களுக்கே"..! கனிமவள விவகாரத்தில் எடப்பாடி vs பிரபு – பேரவையில் பரபரப்பு