தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்., பொதுவாக 100 நாள் வேலைத் திட்டம் என்று அழைக்கப்படும் பெயரை மாற்றி, அதை ரத்து செய்து புதிய சட்டம் கொண்டு வந்த மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து, இன்று திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின.
மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய விக்சித் பாரத் - கிராமின் ரோஜ்கார் அண்ட் அஜீவிகா மிஷன் என்ற புதிய மசோதா, இருபது ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை ரத்து செய்து, அதற்கு பதிலாக புதிய திட்டத்தை அமல்படுத்துகிறது. இந்த மாற்றத்தில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டது, வேலை நாட்கள் 100லிருந்து 125 ஆக உயர்த்தப்பட்ட போதிலும் நிதிப் பங்களிப்பில் மாநிலங்களுக்கு அதிக சுமை ஏற்றப்பட்டது போன்ற மாற்றங்கள் அடங்கும்.

இதை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காந்தியின் மரபை அழிக்கும் முயற்சி, ஏழை ஊரக தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கை என்று கடுமையாக விமர்சித்தன.தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இந்த மசோதாவை கண்டித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். மேலும், அதிமுகவும் இதற்கு ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டினார். இதனால், கூட்டணி கட்சிகள் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்களை அறிவித்தன. இதன்படி, தமிழகம் முழுவதும் 389 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிக் கட்சிகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், உறுப்பினர்களும், 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கிராம மக்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் பாஜக... ஒத்து ஊதும் அதிமுக..! தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்...!
கரூர் மாவட்டம் குத்தளையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100 நாள் வேலை இனி இல்லை எனக் கூறி தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. அப்போது, மாநில அரசு, மத்திய அரசைக் கண்டிக்கிறது எனக் கூறி முழக்கம் எழுப்பிய போது கவனக்குறைவு ஏற்பட்டது. மாநில அரசைக் கண்டிக்கிறோம் என மேடையில் இருந்தவர்கள் முழக்கம் எழுப்பியதால் சிரிப்பலை ஏற்பட்டது.
இதையும் படிங்க: கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி… தமிழ்நாட்டுக்கு முன்னோட்டம்… செல்வப் பெருந்தகை பெருமிதம்…!