வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பான அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு முறையாக அழைப்பு விடுத்தும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்காதது மிகுந்த வருத்தமளிப்பதாக அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். தண்டையார்பேட்டை 4-வது மண்டலத்தில் மழைக்கால பொறுப்பு அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், திமுக கவுன்சிலர்கள் வராத காரணத்தால் அடுத்த வாரம் முதல் அதிகாரிகளுடன் நேரடியாக வீதி வீதியாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிய முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தனர். மக்கள் நலன் சார்ந்த இக்கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விசிக கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

நான்காவது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2015 முதல் 2024 வரை ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. பக்கிங்காம் கால்வாயில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி 60 முதல் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், அடுத்த 20 நாட்களுக்குள் இப்பணிகள் முழுமையாக முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், பக்கிங்காம் கால்வாய் மற்றும் எண்ணூர் முகத்துவாரம் தூர்வாரப்பட்டுத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆர்.கே. நகர் எழில் நகர் மற்றும் பெரம்பூர் முல்லை நகர் பகுதிகளில் மழைநீரை விரைவாக வெளியேற்றக் கூடுதல் மோட்டார்கள் பொருத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் விளக்கினர்.
இதையும் படிங்க: பயிர்க் கடன் தள்ளுபடி செய்யாத தவெகவுக்கு எதிர்ப்பு! இடைத்தேர்தலில் பிரச்சாரம் என விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை!
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இதுவரை அதிகாரிகளுடன் மட்டுமே ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், அடுத்த வாரம் முதல் வார்டு வாரியாகச் சென்று பொதுமக்களை நேரடியாகச் சந்தித்துக் கருத்துகளைக் கேட்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆர்கே நகர் பகுதியில் நிலவும் மின்தடைப் பிரச்சினை குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், வரும் நாட்களில் அது முழுமையாகச் சரிசெய்யப்படும் என்றும் கூறப்பட்டது. தவெக மக்கள் இயக்கமாக இருந்த காலத்திலேயே களப்பணியாற்ற முதலமைச்சர் விஜய் வழிகாட்டியுள்ள நிலையில், தற்போது அரசு இயந்திரத்துடனும், கட்சி இளைஞர்களுடனும் இணைந்து பேரிடர்களைச் சமாளிக்க முழுவீச்சில் தயாராக இருப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மீனவர்களுக்கு பேராபத்து.. புதிய தலைமைச் செயலகத்தால் பாதிப்பு..! CPI எதிர்ப்பு..!