தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தி.மு.க. தலைமை முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜியை மேற்கு மண்டலத்தின் (கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர்) 39 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொறுப்பாளராக நியமித்துள்ளது. இதனால், இந்த மண்டலத்தில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட-ஒன்றிய-நகர செயலாளர்கள் செந்தில் பாலாஜியின் விசுவாசிகளாகத் தங்களை நிரூபிக்க முயன்று வருகின்றனர்.
இது மூத்த திமுக நிர்வாகிகளிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் செந்தில் பாலாஜியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் போஸ்டர்கள் மூலம் வெளிப்பட்ட விவகாரம், ஈரோடு முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜாவின் கடுமையான விமர்சனத்தால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி யாரைக் கை காட்டுகிறாரோ அவருக்கே தேர்தல் டிக்கெட் கிடைக்கும் என்பது திமுக தொண்டர்களின் நம்பிக்கை. இதன் விளைவாக, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களாகத் தங்களை அறிமுகப்படுத்த முயற்சி செய்கின்றனர். சமீபத்தில் அவரது பிறந்தநாளை ஒட்டி, போஸ்டர்கள், சமூக வலைதளங்கள், ரீல்ஸ் மூலம் கொண்டாட்டங்கள் நடந்தன. இதோடு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி, கொண்டாட்டம் உச்சத்தை அடைந்தது.
இதையும் படிங்க: கனிமொழிக்கு ஸ்டாலின் கொடுத்த அசைன்மெண்ட்! கைமீறிய பொறுப்பால் உதயநிதி அப்செட்!
ஆனால், இந்த கொண்டாட்ட போஸ்டர்கள் திமுக பாரம்பரியத்தை மீறியவை என விமர்சனம் எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் எம்.சிவபாலன் வடிவமைத்த வாழ்த்துச் செய்தியில், "மாண்புமிகு மேற்குமண்டலமே..." எனத் தொடங்கி, செந்தில் பாலாஜியின் நான்கு பெரிய படங்கள் மையத்தில் இடம்பெற்றுள்ளன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் படங்கள் மேல் பகுதியில் சிறியதாகவும், பெரியார், அண்ணா, கலைஞர் படங்கள் 'ஸ்டாம்ப்' அளவில் கீழேயும் பதிவிடப்பட்டுள்ளன.

திமுக தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த எம்.ஜூனாயத் வாழ்த்துச் செய்தியில் திமுக தலைவர்களின் படங்கள், பெயர்கள் கூட இல்லை. இந்த இரண்டு போஸ்டர்களையும் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பகிர்ந்த முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா, கடுமையான வாய்ஸ் மெசேஜ் போட்டுள்ளார்.
"ஏண்டா மானங்கெட்டு திரிகிறீர்கள்... ஜெயிக்கச் சொல்லுங்கடா பார்க்கலாம்... ஒரு பதிவிலே தலைவர் (கலைஞர்) படமே இல்லை. இன்னொன்றில் தலைவர் படம் ஸ்டாம்ப் சைசில் இருக்கு. அடுத்து தளபதி (ஸ்டாலின்) படத்தை விட, இவரோட 4 படங்கள் போஸ்டரில் பெரிசா போட்டிருக்கு...
ஏண்டா டேய்... இதுக்கு கூட ரோசம் வர்லேன்னா, அப்புறம் எதுக்குடா கருப்பு, சிவப்பு கொடி கட்டுறீங்க... மனுஷனா, திமுககாரனா இருக்கணும்னு யோசிங்க. ரொம்ப அசிங்கமா போகுது... 18 வயசிலே இருந்து நான் கருப்பு, சிவப்பு கொடி கட்டியவன். இந்த படத்தை பார்த்தபிறகு, நானும் எதுவும் சொல்லலைன்னா, வேறு யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க" என அவர் கோபமாகக் கூறியுள்ளார்.
திமுகவில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன், முதல்வர் மு.க.ஸ்டாலின் படங்களும், மாவட்ட செயலாளர் பெயரும் இடம்பெறுவது வழக்கம். ஆனால், செந்தில் பாலாஜியை பொறுப்பாளராக நியமித்த பிறகு இந்த விதிமுறைகள் மீறப்படுகின்றன. அவரைத் துதித்தால் கட்சி பதவிகள், எம்எல்ஏ, அமைச்சர் டிக்கெட் கிடைக்கும் என நம்பிக்கை வளர்க்கப்பட்டுள்ளது என ராஜா விமர்சித்தார்.
"கருப்பு சிவப்பு வேட்டி கட்டி, கொடி பிடித்து, போராட்டம் செய்து, சிறை சென்று, ஆளுங்கட்சி அடக்குமுறையை எதிர்கொண்டு வளர்ந்த திமுக தொண்டர்கள். அந்த கம்பீரத்தை சிதைக்கும் வேலையை நிறுத்த வேண்டும். இது என் ஆதங்கம் மட்டுமல்ல, கொங்கு மண்டல மூத்த திமுக நிர்வாகிகள், தொண்டர்களின் ஆதங்கம். நான் அதை வெளிப்படுத்தியுள்ளேன்" என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜயை நம்பி காத்திருக்கும் இபிஎஸ்!! அதிருப்தியில் அதிமுக தொண்டர்கள்! உற்சாகத்தில் திமுக!