தூத்துக்குடியில் இருந்து கடல்வழியாக வெளிநாட்டுக்கு பழங்கால அம்மன் சிலை கடத்தப்படவுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, கடந்த 13ம்தேதி தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கு இடமான ஒரு காரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.காரில் ஒரு சாக்குப் பையில் இரண்டடி உயரம் உள்ள உலோக அம்மன் சிலை இருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
சிலையை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த பிரதாப், தங்க சதீஷ், விக்னேஷ், வெற்றிவேல் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, தூத்துக்குடியில் உள்ள கண்ணன் என்பவரது குடோனை உடைத்து அம்மன் சிலையை திருடியது தெரியவந்தது. 4 பேரையும் மதுரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி, விருதுநகர் சிறையில் அடைத்தனர்.

கைதான விக்னேஷ் ஓட்டப்பிடாரம் அடுத்த முப்பிலிவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். தி.மு.க., இளைஞர் அணி ஒன்றிய நிர்வாகியாக இருக்கிறார். அம்மன் சிலை எங்கிருந்து கண்ணன் குடோனுக்கு வந்தது? என்பது பற்றி போலீசார் புலன் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஊட்டியில வெயில் கம்மி.. சென்னைக்கு வந்ததும் ஸ்டாலினுக்கு தெளிஞ்சிரும்.. சல்லி சல்லியா நொறுக்கிய அண்ணாமலை..!

பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே, பல நூறு ஆண்டுகள் பழமையான அம்மன் சிலையை வெளிநாட்டுக்கு கடத்த முயற்சித்த, திமுக ஒன்றிய இளைஞரணி நிர்வாகி விக்னேஷ் என்ற விக்கி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விக்னேஷ் என்பவர், ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவுக்கு நெருக்கமானவர் என்றும், இந்தச் சிலை கடத்தலில், திமுக சட்டமன்ற உறுப்பினருக்கும் தொடர்பு இருப்பதாக, பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். 
ஆனால், திமுகவைச் சேர்ந்தவர் என்பதாலேயே, இந்த சிலை கடத்தல் வழக்கில், சண்முகையா இதுவரை விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என்று தெரியவருகிறது. யாராக இருந்தாலும், முறையான விசாரணை நடத்தி, உண்மைக் குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டும். சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.

எம்எல்ஏ சண்முகையாவுடன் இளைஞரணி நிர்வாகி விக்னேஷ் நெருக்கமாக நிற்கும் படங்களையும் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அண்ணாமலை அறிக்கையை தொடர்ந்து, அம்மன் சிலை கடத்தல் சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அன்னைக்கு இனிச்சது.. இன்னைக்கு வலிக்குதா? மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி..!