நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - கயல்விழி தம்பதியரின் இல்ல விசேஷத்திற்குத் திமுக சார்பில் நேரில் சென்று சீர் வரிசை வழங்கியது குறித்து, திமுக சட்டமன்ற உறுப்பினரும் மூத்த தலைவருமான அனிதா ராதாகிருஷ்ணன் நெகிழ்ச்சியோடு விளக்கம் அளித்துள்ளார். அரசியல் எல்லைகளைக் கடந்து நடைபெற்ற இந்தச் சந்திப்பு குறித்துத் தங்களது கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் வாழ்த்து தெரிவித்தார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் - கயல்விழி தம்பதியருக்குப் பெண் குழந்தை பிறந்திருந்தது. இக்குழந்தைக்குத் தங்களது குடும்ப வழக்கப்படி 'காளி' எனப் பெயரிட்டுள்ளனர். இந்நிலையில், திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் சீமானின் இல்லத்திற்குத் தட்டுகளுடன் நேரில் சென்று, ஒரு அண்ணன் முறைப்படியான பாரம்பரியச் சீர் வரிசைகளை வழங்கி வாழ்த்தினார். தமிழக அரசியல் களத்தில் இருவேறு துருவங்களாகக் கருதப்படும் கட்சிகளின் இந்தச் சந்திப்பு, சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், "சீமானின் மனைவி கயல்விழியின் தந்தையான முன்னாள் சபாநாயகர் காளிமுத்து அண்ணனோடு எனக்குச் சிறு வயதில் இருந்தே மிக நெருங்கிய பழக்கம் உண்டு. அந்த வகையில் கயல்விழி எனக்குச் சொந்தத் தங்கை தான். அவர் சின்னப் பிள்ளையாக இருக்கும்போதே எனக்கு நன்றாகத் தெரியும். தற்போது அவருக்குப் பெண் குழந்தை 'காளி' பிறந்திருக்கிறது. அந்தத் தகவலை உலகிற்கே தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், ஒரு அண்ணனாக என் கடமையைச் செய்யவுமே நான் நேரில் சீர் கொண்டு சென்றேன்" என்று உருக்கமாகக் கூறினார்.
இதையும் படிங்க: 2500 டிஎம்சி தண்ணீரை கடலில் விட்டுவிட்டு கர்நாடகாவிடம் கெஞ்சுவதா? மேகதாது விவகாரத்தில் கொந்தளித்த சீமான்..!!
மேலும், இந்தச் சந்திப்பிற்குப் பின்னால் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று தெளிவுபடுத்திய அவர், "நான் சீர் கொண்டு சென்றதை மக்கள் அனைவரும் மனப்பூர்வமாக வாழ்த்தினார்கள். அதுமட்டுமன்றி, எங்களது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடமும் இதுகுறித்துத் தெரிவித்த போது, அவரும் எங்களது இந்தத் தார்மீக உறவுமுறை நகர்வை வரவேற்று வாழ்த்தினார்" என்று அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். புதிய தவெக அரசு அமைந்த பிறகு, மாற்றுப் பாசறைகளைச் சேர்ந்த திமுக மற்றும் நாம் தமிழர் கட்சித் தலைவர்கள் குடும்ப ரீதியாகத் தங்களது உறவை வெளிப்படுத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கன்னடம் பிறக்கும் முன்பே காவிரி எங்களுடையது! மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவை வெளுத்து வாங்கிய சீமான்!