இன்று தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிரணி தலைமையில், ஆளும் தவெக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் ஆகியவற்றைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பொதுமக்களும், திமுக நிர்வாகிகளும் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என கடந்த 30ஆம் தேதி திமுக தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் காணொளி மூலம் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், அந்தக் காணொளியைத் திரித்து, திமுக ஆட்சிக்கும் தலைவருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவெகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது.
இதையும் படிங்க: அடுத்து சேலமா? பாளையங்கோட்டையா?... Inky Pinky Ponky போடும் கைதிகள்... விஜய் அரசை விளாசிய உதயநிதி...!
இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சைபர் கிரைம் பிரிவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஒப்புகைச் சீட்டு பெறப்பட்டுள்ளதாகவும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய திமுக நிர்வாகி பரந்தாமன், திமுகவினர் மற்றும் திமுக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் வெளியிடும் காணொளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, தவெகவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள காணொளி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், திமுக சார்பில் அளிக்கப்பட்ட பல்வேறு புகார்கள் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காவல்துறை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
ஆட்சி மாறினாலும் காவல்துறை சட்டப்படி நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், தவெகவின் ஐடி விங் மீது அளிக்கப்பட்ட புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் தெரிவித்தார்.
கருத்து தெரிவிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளதாகவும், ஆனால் அவை நியாயமாகவும் சட்டத்துக்கு உட்பட்டும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவர் அதற்குரிய மாண்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்கள் இளைஞர்கள் மத்தியில் தவறான அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
திமுக தலைவர் மீது வெளியிடப்பட்டுள்ள காணொளி தொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “நீங்க உள்ளே போனீங்கனா அவ்ளோ தான்”... செங்கோட்டையன் முன்பே தவெக எம்.எல்.ஏ.விடம் எகிறிய அமைச்சர் விஜய் பாலாஜி... என்ன ஆச்சு?