தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தின் அவினாசி (தனி) தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருத்துவர் கோகிலாமணிக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வீதி வீதியாக நடந்து சென்று வாக்குச் சேகரித்தார்.
வழக்கமான வாகனப் பரப்புரையைத் தவிர்த்து, அவினாசி நகரின் முக்கியச் சாலைகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடைபயணமாகச் சென்று மக்களைச் சந்தித்தார். சாலையோரம் நின்றிருந்த பொதுமக்கள், கடைக்காரர்கள் மற்றும் முதியவர்களிடம் கைகுலுக்கி, திமுக வேட்பாளருக்கு "உதயசூரியன்" சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். முதல்வரை நேரடியாகச் சந்தித்த மகிழ்ச்சியில் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவினாசி தொகுதியில் திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் வி. கோகிலாமணி, கட்சியின் இளம் மற்றும் கல்வி கற்ற வேட்பாளர்களில் ஒருவராகப் பார்க்கப்படுகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் பரப்புரையின் போது மயங்கி விழுந்த முதியவர் ஒருவருக்கு, மருத்துவர் என்ற அடிப்படையில் அவர் முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்தகைய மக்கள் செல்வாக்குள்ள வேட்பாளருக்காக முதலமைச்சரே நேரடியாகக் களமிறங்கியிருப்பது அந்தத் தொகுதியில் திமுகவின் வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு இந்தியாவின் வழிகாட்டி! கோவையில் தேஜஸ்வி யாதவ் புகழாரம்!
அவினாசி - அத்திக்கடவு திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் இந்தப் பகுதி விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கைகளைத் தனது அரசு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றும் என உறுதி அளித்தார். திமுக ஆட்சியின் சாதனைகளைத் தொடரவும், சமூக நீதியைக் காக்கவும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று கோவையில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பரப்புரை மேற்கொண்டனர். அதே சமயம், அருகில் உள்ள அவினாசியில் முதலமைச்சர் ஸ்டாலின் எளிய முறையில் மக்களுடன் கலந்துரையாடியது தொண்டர்களிடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்துத் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் இந்தச் சந்திப்பின் போது மீண்டும் நினைவுபடுத்தினார்.
இதையும் படிங்க: கோவை அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை! பிரதமர் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி சவால்!