வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. குளச்சல்,தக்கலை, குலசேகரம், மார்த்தாண்டம், களியக்காவிளை உட்பட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரியில் அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 87.4 மி.மீ மழை பதிவாகி உள்ளது. பேச்சிப்பாறை பகுதியில் 72.4 மி. மீ மழையும், பெருஞ்சாணி அணைப்பகுதியில் 69.4 மி.மீ மழையும் நாகர்கோவிலில் 40.6 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 42.3 அடியாக உள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 66.81 அடியாக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. குமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ரப்பர் மரங்களில் இருந்து பால் வடிக்கும் தொழில் நிறுத்தம் ரப்பர் விவசாயிகள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING அடித்து வெளுக்கும் கனமழை... இந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...!
கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரதான விவசாயமாக ரப்பர் விவசாயம் இருந்து வருகிறது.மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் பல ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளர் இதனை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் இரவு பகலாக இடைவிடாது கனமழை பெய்து வருவதன் காரணமாக ரப்பர் பால் வடிக்கும் தொழில் நிறுத்தம் தொழிலாளர் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் அவலம் நிலை ஏற்பட்டு உள்ளதோடு அவர்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கோதையாறு, பத்துகாணி, ஆறுகாணி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் ரப்பர் பால் வடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மற்றொருபுறம் குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக கீழமணக்குடி மேலமணக்குடி கோவளம் வாவுத்துறை புதுகிராமம் கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் ஐந்தாயிரத்திற்கு அதிகமான நாட்டு படகு மீனவர்களும் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தங்கள் படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளார்கள். கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு மிக ஆக்ரோஷமாக எழும்பி வருகிறது.
இதையும் படிங்க: புயல் வருதா? தற்போதைய நிலவரம் என்ன?... இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல்...!