வேலூர் கோட்டையில் போலீஸ் துணை கண்காணிப்பாளர் உடையில் கம்பீரமாக வலம் வந்த தோரணையாக சுற்றிய போலி பெண் டிஎஸ்பி சிக்கியது எப்படி?
வேலூர் கோட்டை பூங்காவில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என்று அதிகளவில் திரண்டு வந்து பொழுதுபோக்குவார்கள். கடந்த புதன் கிழமை மாலை பூங்காவில் இளம்பெண் ஒருவர் டிஎஸ்பி சீருடையில் வலம் வந்தார். அவர் அங்கும் இங்குமாக ஒய்யார நடை போட்டு கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பெண் டிஎஸ்பியை பார்த்ததும் போலீசார் சல்யூட் அடித்துள்ளனர். அதற்கு அவரும் வணக்கம் தெரிவித்துள்ளார். ஆனால் அவரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் வடக்கு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் எஸ்ஐ ரேகா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, டிஎஸ்பி சீருடையில் இருந்த அந்த இளம்பெண்னை அழைத்து விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில், சென்னை கிரைம் பிரிவு டிஎஸ்பி என தன்னை அறிமுகம் செய்துள்ளார்.
பின்னர் தனது பாய் பிரண்டுக்கு பிறந்த நாள் என்பதால் கேக் வெட்டி கொண்டாட வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணாக தகவலை தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த நேமபந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த உமாமகேஸ்வரி (33). இவரது கணவர் கூலித்தொழிலாளி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். உமாமகேஸ்வரி 10ம் வகுப்பு வரை படித்து உள்ளார். இவர் பல்வேறு இடங்களில் வீட்டு வேலை செய்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. உமாமகேஸ்வரி சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் தங்கி ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்துள்ளார். அப்போது அங்கு நகை பணம் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அந்த வீட்டின் உரிமையாளர் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றி அங்குள்ள போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு கைது செய்துள்ளனர். இதேபோல் சென்னையில் வசிக்கும் இவரது உறவினர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். அவரை நலம் விசாரிக்க சென்றபோது அங்கும் நகை, பணம் திருட்டில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாகவும் அங்கு போலீசில் புகார் அளித்துள்ளனர். இவர் மீது வடபழனி, பூக்கடை காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளது.
தொடர்ந்து அங்கிருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் மேல் அரசம்பட்டு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் நண்பராக அறிமுகமாகி பழகி வந்துள்ளார்.
புதன் கிழமை அவரது நண்பருக்கு பிறந்த நாள் என்பதால் அவருடன் கேக் வெட்டி கொண்டாட மாலையில் சொந்த ஊரில் இருந்து டிஎஸ்பி சீருடை அணிந்து கொண்டு பஸ்சில் வேலூருக்கு வந்துள்ளார்.
பின்னர் கேக் வாங்கி கொண்டு கோட்டை பூங்காவில் கேக் வெட்டி கொண்டாட வந்துள்ளார். ஆனால் அவரது ஆண் நண்பர் சென்னைக்கு லாரியில் சரக்கு ஏற்றி கொண்டு வர காலதாமதம் ஏற்பட்டது. வருவதற்கு தாமதமாகும் என்று தெரிவித்தாராம். இதைத்தொடர்ந்து அவருடைய பாய் பிரண்டை செல்போனில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது அவருக்கு பிறந்த நாள் என்பதும் அவர் கேக் வெட்டி கொண்டாட வர இருந்ததும் தெரியவந்தது.
இதனால் உமாமகேஸ்வரி தனது ஆண் நண்பரை இம்ப்ரஸ் செய்து கவர இவ்வாறு செய்துள்ளார். இதையடுத்து போலி பெண் டிஎஸ்பி மீது வழக்குப்பதிவு செய்து பிறகு சொந்த ஜாமினில் விடுவித்துள்ளனர். வேலூர் கோட்டைக்கு தினந்தோறும் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களை சேர்ந்த நபர்கள் வருகின்றனர்.
மேலும் கல்லூரி-பள்ளி மாணவ, மாணவிகளும் கோட்டையை சுற்றிப்பார்க்க வருகின்றனர். குறிப்பாக கோட்டை மதில்சுவர்களில் காதலர்கள் சுற்றிவரும்போது அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களில் சில கும்பல் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தது.
இந்நிலையில் இளம்பெண் உமாமகேஸ்வரி டிஎஸ்பி சீருடை அணிந்து வந்து ஏதாவது மோசடியில் ஈடுபட்டாரா?. அல்லது பாய் பிரண்டுக்கு தான் ஒரு டிஎஸ்பி என பொய் கூறினாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் கோட்டையில் பெண் ஒருவர் போலீஸ் துணை கண்காணிப்பாளர் உடை அணிந்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!