சீர்காழி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளர் செந்தில்செல்வன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்காவின் தலையீட்டால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் ஒரு தொகுதியில் தனிச்சின்னத்திலும், மற்ற மூன்றில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட இரு கட்சிகளும் ஒப்பந்தம் செய்திருந்தன. சீர்காழி தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு தலித் சமுதாயத்தைச் சேர்ந்த செந்தில்செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
சீர்காழி துர்காவின் சொந்த தொகுதி என்பதால், அங்கு தனிச்சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிடுவது சரியாக இருக்காது என துர்காவின் உறவினர்களும், மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளும் துர்காவிடம் புலம்பினர். இந்தக் கருத்துகளை துர்கா முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.
இதையும் படிங்க: மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டி..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவைத் தொடர்பு கொண்டு, செந்தில்செல்வன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். டி.ஆர்.பாலு சென்னை அண்ணா நகரில் உள்ள வைகோவின் இல்லத்துக்கு நேரில் சென்று இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
வைகோ இதை ஏற்றுக்கொண்டு, சீர்காழி தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில் செந்தில்செல்வன் போட்டியிடுவதாக அறிவித்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் வைகோவுக்கு நன்றி தெரிவித்தார்.
ம.தி.மு.க.வில் தலித் சமுதாயத்தின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த மல்லை சத்யா நீக்கப்பட்ட பிறகு, திராவிட வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கி தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளார். இந்தப் பின்னணியில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த செந்தில்செல்வனுக்கு சீர்காழி தொகுதி ஒதுக்கப்பட்டது.
தற்போது சீர்காழி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் துர்காவின் தலையீட்டால் ம.தி.மு.க. வேட்பாளர் களமிறங்கியுள்ளார். இந்த மாற்றம் தி.மு.க. - ம.தி.மு.க. இடையேயான ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஒன்றில் தனிச்சின்னம்!! மற்றதில் உதயசூரியன்! மதிமுக ஆலோசனை கூட்டத்தில் வைகோ முடிவு?!