ஜூலை 7 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தை நடத்தி வருகிறார். இந்த சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளில் இருந்து இந்த சுற்றுப்பயணம் தொடங்கியது. ஜூலை 21 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் கட்டம் முடிவடையும் என கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கி, மக்களைச் சந்தித்து, திமுக அரசின் தோல்விகளை அம்பலப்படுத்துவதும், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துரைப்பதும் இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில உரிமைகள், அமைதி, வளர்ச்சி, மற்றும் செழிப்பை மீட்டெடுப்பதாக எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில், அவரது சுற்றுப்பயணம் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. தற்போது பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் மக்களிடையே திமுக அரசு பற்றியும், அதிமுகவின் சாதனைகள் தொடர்பாகவும் விவரித்து வருகிறார். இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி வரும் 24ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிச்சாமி தொடங்குகிறார்.

இதனிடையே பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் மக்கள் மத்தியில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அப்போது, 1.1 கோடி பேரிடம் மனுக்களை பெற்று ஒரு கோடி பேருக்கு தீர்வு காணப்பட்டது எனில் அது தொடர்பான விளக்கம் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். திமுக அரசின் சாதனை என அமுதா ஐஏஎஸ் தவறான புள்ளி விவரங்களை கொடுப்பதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். மேலும் திமுக ஆட்சியில் தவறான புள்ளி விவரம் அளிபுர் மீது அதிமுக ஆட்சியில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். ஐஏஎஸ் அதிகாரிகள் பணியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்து விடுங்கள் என்றும் விமர்சித்தார்.
எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழக மக்கள் நலன் கருதி மக்கள் பிரச்சனையை மத்திய அரசிடம் கொண்டு சென்றதாக தெரிவித்த அவர், சாதிக்காரி கணக்கெடுப்பு நடத்துவது முதல்வர் ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை என்பதால் தட்டிக் கழிப்பதாக குற்றம் சாட்டினார். சாதிவாரி கணக்கெடுப்பு என அறிவித்து மத்திய அரசு மரண அடி கொடுத்துள்ளதாகவும், நாங்கள் அமித்ஷா வீட்டின் கதவை தட்டியதால் தான் 100 நாள் வேலை திட்டத்திற்கான பணம் தமிழகத்திற்கு வந்தது என்றும் வீடு வீடாக சென்று பிச்சை எடுப்பது போல் அப்பாவும் மகனும் திமுக கட்சியின் நிலையை கொண்டு வந்து விட்டனர் என்றும் சாடினார். மக்கள் அனைவரும் ஓரணியில்தான் நிற்கிறார்கள் திமுக தான் வேறு அணியில் உள்ளது என்றும் அதிமுகவுக்கு ஆட்சி அதிகாரம் முக்கியமில்லை மக்கள் தான் முக்கியம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி..! நலத்திட்டங்களை பட்டியலிட்ட இபிஎஸ்..!
இதையும் படிங்க: "ஜோடி போட்டுக்கலாமா?" - எங்க கூப்பிட்டாலும் வரத் தயார்... மு.க.ஸ்டாலினுக்கு நேரடி சவால் விட்ட எடப்பாடி...!