தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், சமூக நலத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக இந்த உதவித்தொகை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அரசு அங்கீகரித்த பாடப்பிரிவுகளின் பட்டியலில் புதிய படிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. சமூக நலத்துறை அமைச்சர் வன்னியரசு வெளியிட்ட அறிவிப்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை, சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்வி நிறுவனங்களில் பயிலும் தகுதியான மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கு வசூலிக்கப்படும் அனைத்து கட்டாய மற்றும் திரும்பப்பெற முடியாத கட்டணங்களும் உதவித்தொகையாக வழங்கப்படும். புதிய உயர்த்தப்பட்ட தொகை விவரங்கள்: இளங்கலை கலைப் பட்டப்படிப்பு (B.A.) முன்பு ரூ.1,350 ஆக இருந்தது இப்போது ரூ.11,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் மிகப்பெரிய சதித்திட்டம் முறியடிப்பு! பயங்கரவாதிகளுக்கு ‘பாதை’ காட்டிய 3 பேர் கைது! வெடிகுண்டு பறிமுதல்!
முதுகலை கலைப் பட்டப்படிப்பு (M.A.) ரூ.1,350-இல் இருந்து ரூ.12,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. B.Com., B.Com. (Hons), B.Sc. போன்ற படிப்புகளுக்கு முன்பு ரூ.2,850 ஆக இருந்த உதவித்தொகை ரூ.11,250 ஆகவும், B.B.A. க்கு ரூ.4,750-இல் இருந்து ரூ.11,250 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. M.Com. மற்றும் M.Sc. படிப்புகளுக்கு ரூ.2,850-இல் இருந்து ரூ.12,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இது சுமார் 9 மடங்கு உயர்வாகும்.

இதனுடன், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவுகளின் பட்டியலில் புதிதாக 11 இளங்கலைப் படிப்புகள், 10 முதுகலைப் படிப்புகள் மற்றும் 2 பட்டயப் படிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த விரிவாக்கம் காரணமாக, திட்டத்தின் கீழ் பயனடையும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் வன்னியரசு இதுகுறித்து கூறுகையில், “மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு, 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த உதவித்தொகையை உயர்த்தியுள்ளது. புதிய பாடப்பிரிவுகள் சேர்க்கப்பட்டதால் அதிக மாணவர்கள் பயனடைவார்கள்” என்று தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை, பின்தங்கிய சமூக மாணவர்களின் உயர்கல்விச் சுமையைக் குறைத்து, அவர்களின் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. சுயநிதி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும் இப்போது அதிக நிதி உதவி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குடை மட்டும் போதாது! 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! முழு விவரம்!