தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நாளை (மார்ச் 23) நடைபெற உள்ள நிலையில், மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்துச் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் பகிரங்கக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
திருமங்கலம் தொகுதியில் அதிமுகவின் தேர்தல் பணி மையமாகச் செயல்படும் 'அம்மா கோவில்' வளாகத்தில், கடந்த சில தினங்களாகத் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் வியூகங்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் இங்கு நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஆளுங்கட்சியின் நிர்பந்தத்தின் பேரில் இதுவரை 5 முறை அதிகாரிகள் இங்கு சோதனை நடத்தியுள்ளனர்.

தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சியின் கைப்பாவையாகச் செயல்படுகின்றனர். அம்மா கோவிலின் ஒவ்வொரு அறையையும் அங்குலம் அங்குலமாகச் சோதனை செய்தார்கள். ஆனால், ஒரு சிறு பொருள் கூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியே நாங்கள் பணியாற்றுகிறோம். ஆனாலும், அதிமுகவின் தேர்தல் பணிகளை முடக்க வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. எங்கள் மடியில் கனமில்லை, அதனால் எங்களுக்குப் பயமில்லை, என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தைலாபுரத்தில் சசிகலா - ராமதாஸ் ஆலோசனை! புதிய தேர்தல் கூட்டணி உறுதி?
ஆளுங்கட்சியினரின் இடங்களிலோ அல்லது அவர்கள் தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் இடங்களிலோ அதிகாரிகள் எந்தச் சோதனையும் நடத்தவில்லை என அதிமுக வழக்கறிஞர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு வழக்கைப் போட்டு அதிமுகவினரை முடக்க வேண்டும் என்ற நோக்கில் ஆளுங்கட்சி அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதாகவும், அதற்குத் தேர்தல் அதிகாரிகள் துணை போவதாகவும் பொதுமக்கள் தரப்பிலும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்றும், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் திருமங்கலம் தொகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள சூழலில், இந்தப் புகார் திருமங்கலம் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக தொகுதிகள் மீது பாஜக கண்? நயினார் நாகேந்திரன் கொடுத்த அதிரடி விளக்கம்!