திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டை அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. கிட்னி திருட்டு விவகாரத்தில் இடைத்தரகர்களை மட்டுமே திமுக அரசு கைது செய்த இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை திமுக எம்எல்ஏவின் மருத்துவமனை என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி இருந்தார். இதற்கிடையில், திமுகவின் உருட்டு கடை அல்வா என பாக்கெட்டுகளை காண்பித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.
அந்தப் பாக்கெட்டுகளை அனைவருக்கும் கொடுத்தார். எடப்பாடி பழனிச்சாமி விநியோகித்த பாக்கெட்டுகளில் அல்வாவுக்கு பதில் பஞ்சு இருந்ததால் வாங்கியவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அல்வா என நினைத்தால் பஞ்சு தான் இருக்கும் என்பது போல திமுக வாக்குறுதிகள் ஆகிவிட்டதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார். திமுக அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை திமுக விமர்சித்துள்ளது. உருட்டுக் கடை அல்வா என்ற புதிய அல்வா கடையை திறந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி என்றும் அல்வா கொடுப்பது என்பது அவருக்குத் தெரிந்த ஒரே தொழில் எனவும் கூறப்பட்டுள்ளது. தனக்கு பதவி கொடுத்த சசிகலாவுக்கு முதலில் அல்வா கொடுத்தார் பழனிசாமி என்றும் அதன் பிறகு, எந்த டி.டி.வி. தினகரனுக்கு அவர் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்கு கேட்டாரோ அவருக்கே அல்வா கொடுத்தார் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மழை தீவிரம் அதிகமா இருக்கு… போர்கால நடவடிக்கை எடுங்க… EPS வார்னிங்…!
பின்னர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அல்வா கொடுத்தார் என்றும் உங்களோடு தான் கூட்டணி என்று டெல்லியில் போஸ் கொடுத்து விட்டு சென்னை வந்ததும் பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் ஸ்பெஷல் அல்வா கொடுத்தவர்தான் பழனிசாமி என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது. இப்படி அவர் அல்வா கொடுத்த வரலாறுகள்தான் பழனிசாமி கால அ.தி.மு.க.வின் வரலாறுகள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்டா விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளி! தீயசக்தி திமுக... விளாசிய இபிஎஸ்...!