கிராமங்களில் உள்ள ஓலைக் குடிசைகள், ஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வீடுகள் உள்ளிட்ட அனைத்து வீடுகளுக்கும் பல மடங்கு சொத்து வரியை உயர்த்தியுள்ள அலங்கோல ஸ்டாலின் மாடல் ஆட்சிக்கு கண்டனம் தெரிவிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

ஆட்சிக்கு வந்த 48 மாதங்களில், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள வீடுகள், கடைகளுக்கு இரண்டு முறைகளுக்கு மேல் சொத்து வரியை உயர்த்தியதுடன், இனி ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயர்வையும் அறிவித்த அலங்கோல ஸ்டாலின் மாடல் அரசு, இந்த ஆண்டு (2025-2026) முதல் தமிழகத்தில் அனைத்து பஞ்சாயத்துகளிலும் உள்ள ஒலைக் குடிசைகள், ஓடு, ஆஸ்பெட்டாஸ் வீடுகள், கான்கிரீட் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் சொத்து வரியை உயர்த்தியதுடன், புதிய வரியை வசூலிக்க அதிகாரிகளை வற்புறுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டெல்லி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்..! மேளதாளம் முழங்க MASS வரவேற்பு..!

தற்போது, உயர்த்தப்பட்ட சொத்து வரியின்படி, 2025-2026 முதல், இனி ஓலைக் குடிசைகளுக்கு அதிகபட்சமாக சதுர அடி ஒன்றுக்கு 40 பைசா முதல் 1 ரூபாய் வரையும், ஓட்டு வீட்டிற்கு சதுர அடி ஒன்றுக்கு 30 பைசா முதல் 60 பைசா வரையும், கான்கிரீட் வீட்டிற்கு சதுர அடி ஒன்றுக்கு 50 பைசா முதல் 1 ரூபாய் வரையும், வீட்டு வரி உயர்த்தப்பட வேண்டும் என்றும், ஏற்கெனவே உள்ள பழைய வீடுகளுக்கும் இந்த வரி உயர்வின்படி புதிய வரியை வசூலிக்க வேண்டும் என்றும் நிர்வாகத் திறமையற்ற ஸ்டாலின் மாடல் அரசு உள்ளாட்சிகளுக்கு உத்தரவு வழங்கியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, இனி ஊராட்சிகளில் அதிகபட்சமாக 500 சதுர அடி கான்கீரிட் வீடுகளுக்கு ரூ. 500ம், ஓட்டு வீடுகளுக்கு ரூ. 300ம், ஓலை வீடுகளுக்கு ரூ.200ம் வீட்டுவரி வசூலிக்கப்படும் என்றும் ஸ்டாலின் மாடல் திமுக அரசு, ஏழை மக்களின் குடிசைகளுக்கு வரியை உயர்த்தி, அவர்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது., இதுதான், இந்த ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியின் சாதனை என சாடியுள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக மக்களின் வயிற்றில் அடித்து, அலங்கோல கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் ஸ்டாலின் மாடல் அரசு, பஞ்சாயத்துப் பகுதிகளுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரிகளை உயர்த்தி இருப்பதை வன்மையாகக் கண்டிப்பாகவும், பஞ்சாயத்துப் பகுதிகளுக்கு உயர்த்தப்பட்ட வீட்டு வரிகளை திரும்பப் பெற வேண்டும் என்று நிர்வாகத் திறமையற்ற முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துவதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தேர்தலில் 234 தொகுதிகளும் திமுக கூட்டணிக்குதான்.. அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாறுமாறு.!!