தமிழகத்தில் நிலவி வரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, வரும் மார்ச் 17-ஆம் தேதி மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான திரு. எடப்பாடி கே. பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்ற நாள் முதல் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் அன்றாட நிகழ்வுகளாகி, தமிழகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டதாக எடப்பாடியார் குற்றம் சாட்டியுள்ளார்.
போதைப் பொருட்களின் கேந்திரம்: தமிழகம் தற்போது போதைப் பொருட்களின் புகலிடமாக உருவெடுத்துள்ள சூழலில், ஆளும் கட்சியினரின் அராஜகங்கள் எல்லை மீறிச் செல்வதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இதனை வேடிக்கை பார்க்கும் முதலமைச்சர் ஸ்டாலினின் போக்கிற்குத் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: திமுகவிற்கு நடுக்கம் தொடங்கிவிட்டது! திருச்சி பொதுக்கூட்டத்திற்கு முன்பாக பிரதமர் மோடி அதிரடி பதிவு!

இந்த மக்கள் விரோதச் செயல்களைக் கண்டித்து, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் (NDA) கட்சிகள் ஒன்றிணைந்து இந்தப் பிரம்மாண்ட போராட்டத்தை முன்னெடுக்கின்றன.
வரும் 17.03.2026 (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில், தமிழகத்தின் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் கழகத்தின் தலைமைக் கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தை மீட்டெடுக்க, 'ஸ்டாலின் மாடல்' அரசுக்கு எதிராக அனைத்துத் தரப்பு மக்களும் இந்த அறப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்" என எடப்பாடி பழனிசாமி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: "அதிமுக தலைமையில் தேஜ கூட்டணி; தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி" எடப்பாடியில் இபிஎஸ் பேச்சு!