கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மிகக்கடுமையானச் சொற்களால் விமர்சித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்று அதிமுக இல்லத்திலும் சரி, திமுக இல்லத்திலும் சரி, அங்குள்ளப் பெண்களும் இளைஞர்களும் ஒருமனதாகத் தவெக தலைவர் விஜய்க்குத்தான் ஓட்டு எனத் தெரிவிக்கிறார்கள். எங்களது கள ஆய்வின்படி நாங்கள் தற்போது 40 சதவீத செல்வாக்குடன் இருக்கிறோம் என அதிரடியாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: யாருக்கும் பாதுகாப்பு இல்லை! அடையாறு படுகொலை மற்றும் நந்தனம் வன்கொடுமைக்கு தவெக தலைவர் கண்டனம்
எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் போன்றவர்கள் திரையுலகிலிருந்து வந்து வெற்றி பெற்றுச் சாதனை படைத்தவர்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி எந்தத் தேர்தலில் தனித்து நின்று வென்றார்? சட்டமன்றம், நாடாளுமன்றம் என எதிலும் அவர் தனித்து வென்றதாக வரலாறே இல்லை. அவர் எப்படி முதலமைச்சரானார் என்பது ஊருக்கேத் தெரியும்; தவழ்ந்து வந்து முதலமைச்சரானவர் அவர் எனச் சாடினார். பிரதமர் வரும்போது கூட அதிமுக தலைவர்கள் புகைப்படம் பின்னால் இல்லை; ஒருவரின் முகத்தை மட்டும் வைத்துக்கொண்டு கட்சி நடத்துகிறார்கள். அவர் முகத்திற்காக ஓட்டுப் போட மக்கள் ஒன்றும் தயாராக இல்லை என்றார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட போது, அன்றைய முதலமைச்சரான இவர் நேரில் சென்று பார்த்தாரா? ஒரு அமைச்சராவதுப் போய் பேச்சுவார்த்தை நடத்தினார்களா? பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டும் காணாமல் இருந்தவர்களுக்கு விஜய்யைப் பற்றிப் பேச என்னத் தகுதி இருக்கிறது?" என வினவினார். கூட்டணி குறித்துச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, நாங்கள் எங்களது தலைவரின் வழிகாட்டுதலில் பயணிக்கிறோம். அதிமுகவில் இருப்பவர்கள் போல இஷ்டத்திற்குப் பேச முடியாது; கூட்டணி குறித்த முடிவைத் தலைவர் விஜய் தான் அறிவிப்பார் எனத் தெரிவித்தார். மேலும், மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், ஆண்டுக்கு 500 கோடி வருவாய் தரும் தொழிலை விட்டுவிட்டு மக்கள் பணியாற்ற வந்திருக்கும் விஜய்யை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர் என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தவெக-வில் இணைந்த பிறகு, செங்கோட்டையன் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கடும் தாக்குதல்களைத் தொடுத்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “விஜய் ஏன் கரூருக்கு வரவில்லை?” - 125 நாட்களுக்கு பிறகு ‘தளபதி’யை வம்புக்கு இழுத்த இ.பி.எஸ்!