சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் தேரடி திடலில் இன்று நடைபெற்ற அதிமுக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், சிவகங்கை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதனை ஆதரித்துப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றுப் பேசினார். அப்போது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் திமுகவின் செயல்பாடுகள் குறித்து அவர் முன்வைத்த விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
அண்மையில் காரைக்குடிக்குச் சென்று சைக்கிள் ஓட்டியும், தொண்டர்களுக்குக் கையசைத்தும் பரப்புரை செய்து வரும் நடிகர் விஜய் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த நயினார் நாகேந்திரன்: நேற்று கூட அவர் காரைக்குடி வந்து சைக்கிள் ஓட்டினார், கை அசைத்தார் என்று கேள்விப்பட்டேன். ஆனால், அரசியலில் எல்லாரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது; புரட்சித்தலைவி அம்மா ஆகிவிட முடியாது. அரசியலுக்குத் தனி கொள்கை, கட்டமைப்பு மற்றும் இயற்கையான உணர்வு வேண்டும். திமுகவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காகவே அவர் (விஜய்) கட்சி தொடங்கியிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அரசியல் என்பது மக்கள் நலனுக்காக இருக்க வேண்டுமே தவிர, ஆட்சிக்காக மட்டும் அல்ல" எனச் சாடினார்.விஜய் முதலில் ஒரு நல்ல குடும்பஸ்தனாக, நல்ல கணவனாக இருக்க வேண்டும் எனத் தனது தனிப்பட்ட விமர்சனத்தையும் முன்வைத்தார்.

நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக ஏன் மத்திய அரசை வலியுறுத்தவில்லை என்ற கனிமொழியின் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்: நீட் தேர்வு என்பது உச்சநீதிமன்ற உத்தரவின்படி நடைபெறும் அகில இந்திய நடைமுறை. திமுகவும் காங்கிரஸும் மத்தியில் இருந்தபோதுதான் இதைக் கொண்டு வந்தனர். இப்போது மாநில அரசுகள் மட்டும் இதை ரத்து செய்ய முடியாது. இன்று சாதாரணத் தொழிலாளி வீட்டுப் பிள்ளைகளும் நீட் எழுதி மருத்துவம் படிக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள பல தனியார் மருத்துவக் கல்லூரிகள் திமுகவினரிடமே உள்ளன; அதனால்தான் அவர்கள் இதை எதிர்க்கிறார்கள்" எனக் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: தமிழகத்தை போதைக்காடாக மாற்றிய திமுக! நயினார் நாகேந்திரன் கடும் தாக்குதல்!
மதப் பிரிவினை தொடர்பான திமுகவின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர் நாங்கள் கோவில், பள்ளிவாசல், தேவாலயம் என எல்லா இடங்களுக்கும் செல்கிறோம். அனைத்து மதத்தினருக்கும் வாழ்த்துத் தெரிவிக்கிறோம். மத நல்லிணக்கமே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) நிலைப்பாடு என்றார். மேலும், ஊடகங்கள் திமுக செய்திகளுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்துத் தங்களது செய்திகளைப் புறக்கணிப்பதாக வருத்தம் தெரிவித்தார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை உருவாகியுள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் மோதல் மற்றும் பிற விவகாரங்கள் கடந்த காலப் பேச்சுக்கள்; தற்போது எமது இலக்கு திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது மட்டுமே" என்று கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.
சிவகங்கையில் சிட்டிங் எம்.எல்.ஏ-வான செந்தில்நாதனுக்காக நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட இந்தப் பரப்புரை, டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் அமைந்தது.
இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் கூட்டணியை நீடிக்காவிட்டால் அரசு ஊழியர்களின் ஊதியம் பறிபோகும்! நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!