தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். வானிலை ஆய்வு மையம் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான ஏற்பாடுகளை நேரடியாகக் கண்காணிக்கும் வகையில் இந்த ஆய்வு நடைபெற்றது.
முதலமைச்சர் விஜய் அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு வந்தவுடன், அங்கு நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் டிஜிட்டல் டாஷ்போர்டுகளைப் பார்வையிட்டார். மாநிலம் முழுவதும் பெய்து வரும் மழையின் அளவு, ஆறுகள் மற்றும் கால்வாய்களின் நீர்மட்டம், தாழ்வான பகுதிகளில் ஏற்படக்கூடிய வெள்ள அபாயம் உள்ளிட்ட தகவல்களை அதிகாரிகள் விரிவாக விளக்கினர்.

குறிப்பாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழைநீர் வடிகால் அமைப்புகளின் நிலை, மழைநீர் தேங்கும் இடங்கள் மற்றும் அவற்றைக் கையாளும் வகையில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்கள் குறித்து முதலமைச்சர் விரிவாகக் கேட்டறிந்தார்.இந்த ஆய்வின்போது, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், நீர்வளத்துறை, மாநகராட்சி, காவல்துறை, மின்சாரத்துறை மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: அடிதூள்...!! - மெரினாவில் அடுத்த பிரம்மாண்டம்... லைட் ஹவுஸ் டு அடையாறு திரு.வி.க பாலம் வரை... மாஸ் அறிவிப்பு...!
மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலமாகவும் தொடர்பு கொள்ளப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தகவல் பெறப்பட்டது. மலை மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம், கடலோரப் பகுதிகளில் கடல்நீர் உட்புகுதல் மற்றும் வெள்ளப் பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் ஆகியவை விரிவாக விவாதிக்கப்பட்டன.முதலமைச்சர் விஜய், மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: வேலூர் துயரம்... பட்டாசு ஆலை வெடி விபத்து..! முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு..!!