பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் தவெக அமைச்சர்கள் கேட்ட கால அவகாச கெடுவுக்குள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், அக்டோபர் 22ம் தேதி முதல் மீண்டும் விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்க உள்ளதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகேசன் தெரிவித்தார்.
கரூர் மாவட்டம் தென்னிலை கிராமத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சார்பில் விவசாயிகள் பாதுகாப்பு மற்றும் கோரிக்கைகளை விளக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார்.
இதில், தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் அண்மையில் பயிர் கடன் தள்ளுபடி கோரிக்கை தொடர்பான போராட்டத்தில் கலந்து கொள்ள சென்று வழியில் உயிர் நீத்த கரூர் முனியப்பனூரை சேர்ந்த விவசாயி கந்தசாமிக்கு மெளன அஞ்சலி தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அம்போன்னு நிற்கும் 5,000 ஏக்கர் சம்பா... விஜய் அரசுக்கு சவால் விட்ட விவசாயிகள்... திருத்துறைப்பூண்டி உச்சக்கட்ட பரபரப்பு...!
இதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் ஈசன் முருகசாமி கூறியதாவது: கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் விமல்ராஜ் சட்டவிரோத கனிமவளக் கடத்தலைத் தடுப்பதற்குப் போதிய ஆய்வுகளை மேற்கொள்ளாமல், கடத்தலில் ஈடுபடுவோருக்குச் சாதகமாகச் செயல்படுவதாகவும், சமீபத்தில் மூன்று பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கான அனுமதிகளில் தலா ரூ.12 லட்சம் வீதம் கையூட்டு பெற்றதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
கனிமவள முறைகேடுகள் குறித்து புகார் அளிக்கும் விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்க நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைப்பதாகவும், இது தொடர்பாகப் புகார் அளித்து இரண்டு மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாவட்ட வருவாய் அலுவலர் விமல்ராஜை பணிநீக்கம் செய்யக் கோரி விரைவில் சென்னை தலைமைச் செயலகம் முன்பு தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக எச்சரித்தார்.
மேலும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அண்மையில் திருச்சி சமயபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது தவெக அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உறுதி அளிக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற 20 நாட்கள் கால அவகாசம் கேட்டனர்.
அந்தக் கால அவகாசத்துக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வரும் அக்டோபர் 22ஆம் தேதி முதல் மீண்டும் சமயபுரத்தில் விவசாயிகள் பங்கேற்கும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்படும் என அறிவித்தார்.
கரூர் மாவட்டத்தின் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள், விவசாய நிலங்கள், விளைச்சல் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டங்களை நிறுத்த வேண்டும் என்றும், அதற்குப் பதிலாகச் சாலையோரங்களில் பூமிக்கடியில் மின்கேபிள்களை அமைத்து மின்பாதைகளைக் கொண்டு செல்ல வேண்டும்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது, சட்டவிரோத கனிமவளக் கடத்தலைத் தடுப்பது, நீர்நிலைகளைப் பாதுகாத்து வறட்சியைப் போக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அம்போன்னு நிற்கும் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்... விஜய் ஆட்சியில் வீதிக்கு வந்த விவசாயிகள்... ஆவேச முடிவு...!