மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு போதிய அளவு தண்ணீர் இல்லாத காரணத்தால் குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, தற்போது ஒரு போக சம்பா சாகுபடியையாவது மேற்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் இருந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், அந்தத் தண்ணீர் ஆற்றில் மட்டும் சென்று கொண்டிருப்பதால் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை.
இதனால் விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 3.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்வது வழக்கம்.
இதையும் படிங்க: “விசில் போடு...” - சி.எம். விஜய் கவனத்தை ஈர்க்க விவசாயிகள் நூதன போராட்டம்... 4வது நாளாக அதிரடி...!
இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை காரணமாக நேரடி நெல் சாகுபடி செய்ய தமிழக வேளாண்துறை அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, விவசாயிகள் உழவு பணிகளை மேற்கொண்டு, தற்போது நேரடி நெல் விதைப்பு பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.
ஆனால், கடைமடைப் பகுதியான முத்துப்பேட்டை பகுதியில் இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை. வயல்களுக்கு தண்ணீர் வராததால், வயல் வாய்க்கால்கள் அனைத்தும் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன.
இதனால், தற்போது விதைக்கப்பட்டுள்ள நெல் பயிர்கள் கடுமையான வெயில் காரணமாக கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், விதை நெல் மண்ணிலேயே மக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக நீர் விநியோகத்தை முறையாக நிர்வகிக்க வேண்டும் என்றும், கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேருவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும், இதுவரை மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளான கோவிலூர் ஆயிரகன்னி, ஆலங்காடு, கீழநம்மங்குறிச்சி, சிறுபட்டக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஐந்தாயிரம் ஏக்கருக்கு மேல் பாமணி ஆறு பாசனத்தை நம்பி விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தண்ணீர் திறந்து ஒரு மாதத்தை கடந்தும் இதுவரை வாய்க்கால் குளங்களுக்கு தண்ணீர் வராத நிலையில் வயல்களில் தெளிக்கப்பட்ட நெல் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது . இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் இன்று திடீரென முத்துப்பேட்டை அருகே கோவிலூர் கோட்டகம் பகுதியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, இன்று திருத்துறைப்பூண்டி-முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் பகுதியில் விவசாயிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக சுமார் இரண்டு மணி நேரமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேர்கிறதா என்பதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவ்வாறு தண்ணீர் வந்து சேரவில்லை என்றால், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை கருத்தில் கொண்டு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், சாகுபடியை மேற்கொள்ள வேண்டாம் என விவசாயிகளுக்கு உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தலைமைச் செயலகத்தில் விஜய்–சிங்கப்பூர் தூதர் சந்திப்பு..! முதலீடுகளை அதிகரிக்க திட்டமா..? எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!