கள்ளக்குறிச்சி அடுத்துள்ள ஏர்வாய்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக அதே கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்பவர் கடந்த 2024 ஆம் ஆண்டு துபாய் நாட்டிற்குச் சுற்றுலா விசாவில் அனுப்பியுள்ளார். அதன்படி வெளிநாட்டிற்குச் சென்ற ஜெயபால் ஒரே மாதத்தில் உடல் நலன் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சொந்த ஊருக்குத் திரும்பினார். ஆனால் ஜெயபால் 2 நாட்களில் உயிரிழந்தார்.

இது குறித்து வெளிநாட்டிற்கு அனுப்பிய விஜய் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கூறி ஜெயபாலின் மனைவி மலர் கச்சராப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த புகார் மீது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஜெயபால் மனைவி மலர் இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அஜீத்குமார் கொலை விவகாரம்.. சில விஷயங்கள் ஒருபோதும் மாறுவது இல்லை.. மன்னிப்பு கேட்டு சாந்தனு ட்வீட்!!

இருப்பினும் 2 மாதங்கள் ஆகியும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மலரின் உறவினரான ஒருவர் கச்சராப்பாளையம் காவல்நிலையத்தில் சென்று ஆய்வாளரிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது கோபமடைந்த காவலர்கள் அவரை தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் காவலர்கள் அந்த நபரை மிக கொடூரமாக துரத்தி துரத்தி தாக்குகின்றனர்.

இது பார்ப்போரின் மனதைப் பதைபதைக்க வைத்துள்ளது. இந்த சம்பவமானது கடந்த மாதம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முதன்மை சாட்சியையே மிரட்டுகிற துணிச்சலுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? சீமான் கேள்வியால் பரபரப்பு!!