தமிழகத்தில் பெரும் முதலீட்டாக எதிர்பார்க்கப்பட்ட பாக்ஸ்கான் நிறுவனத்தின் 15,000 கோடி ரூபாய் முதலீடு குறித்த அறிவிப்பு, நிறுவனத்தின் மறுப்பால் சர்ச்சையாக மாறியுள்ளது. தைவான் நாட்டைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்தியா தலைவர் ராபர்ட் வூ, நேற்றுமுன்தினம் (அக்டோபர் 13) முதல்வர் மு.க. ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்புக்குப் பின், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, 'பாக்ஸ்கான் 15,000 கோடி முதலீடு செய்து 14,000 உயர்மட்ட வேலைவாய்ப்புகளை உறுதி செய்துள்ளது' என சமூக வலைதளத்தில் அறிவித்தார். இதை வரவேற்று முதல்வர் ஸ்டாலினும் பதிவிட்டார்.
ஆனால், இதற்கு பாக்ஸ்கான் தரப்பு உடனடியாக மறுப்பு தெரிவித்தது. 'புதிதாக நியமிக்கப்பட்ட இந்தியா பிரதிநிதி ராபர்ட் வூ, முதல்வர் அலுவலகத்துடன் நடத்திய சந்திப்பில், புதிய முதலீடுகள் எதுவும் விவாதிக்கப்படவில்லை' என நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்தது.
இதையும் படிங்க: செத்து செத்து விளையாடுவோமா? தகன மேடையிலிருந்து எழுந்து ஷாக் கொடுத்த முதியவர்...!
இது அமைச்சரின் அறிவிப்புக்கு முரண்படுவதாக இருப்பதால், முதலீடு உண்மையானதா என சந்தேகங்கள் எழுந்துள்ளன. சமூக வலைதளங்களில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பதிலாக, தொழில்துறைத் துறை அதிகாரிகள், 'சந்திப்பில் 15,000 கோடி முதலீடு குறித்து விவாதிக்கப்பட்டது. பாக்ஸ்கான் அதை 'புதியது' என்று பார்க்காமல், முந்தைய உறுதிமொழியின் தொடர்ச்சியாகக் கருதலாம். ஆனால், இது முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு' என தெரிவித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன், பாக்ஸ்கான் குழுமத்தின் யூஷான் டெக்னாலஜி நிறுவனத்தின் 13,180 கோடி முதலீட்டுக்கு தமிழக அமைச்சரவை அனுமதி அளித்தது. இது காஞ்சிபுரத்தில் உள்ள தொழிற்சாலையில் மொபைல் போன் உற்பத்திக்கானது. பல மாநிலங்கள் முதலீட்டைப் பெற முயல்வதால், ரகசியமாக வைக்கப்பட்டதாகவும், இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் விளக்கினர். அமைச்சர் ராஜாவின் அறிவிப்பும் நிறுவனத்தின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முரண்பாட்டை தமிழக பாஜக தலைமைச் செய்தித் தொடர்பாளர் திருப்பதி நாராயணன் கடுமையாகக் கண்டித்துள்ளார். 'அமைச்சரும் முதல்வரும் ஏன் இப்படி தவறான தகவல் பரப்புகிறார்கள்? இல்லாத முதலீட்டை இருப்பதாக, நடக்காததை நடந்ததாகச் சொல்வது கண்டனத்திற்குரியது. மக்களைத் திசைதிருப்புவதாகும். இதேபோல் மற்ற முதலீடுகள் குறித்தும் அரசு செய்கிறதா?' என அவர் வெளியிட்ட அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாக்ஸ்கான், உலகின் மிகப்பெரிய மின்னணு உற்பத்தி நிறுவனமாக, ஆப்பிள் ஐபோன் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் ஏற்கனவே சிறுகாஞ்சிபுரத்தில் தொழிற்சாலைகள் உள்ளன.
இந்த 15,000 கோடி முதலீடு, உயர்தர உற்பத்தி, ஆர்ஆண்டி, ஏஐ தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது. இது 14,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கவுடென்ஸ் தமிழ்நாடு அமைப்பு, இந்தியாவில் முதல் 'பாக்ஸ்கான் டெஸ்க்' அமைக்க உள்ளது.
இந்த சர்ச்சை, தமிழகத்தின் தொழில்முன்னேற்ற உறுதியை சந்தேகத்திற்குள்ளாக்கியுள்ளது. பாக்ஸ்கான் முதலீடு உண்மையில் நடக்குமா என்பது கவனிக்கத்தக்கது. அரசியல் வட்டாரங்களில் இது பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
இதையும் படிங்க: இனிமே எல்லாம் இந்தியாமயம்!! அமெரிக்காவுக்கே நாம தான் சப்ளை! சீன நிறுவனத்தை கையகப்படுத்தியது டாடா!