சென்னை, ஜனவரி 6: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறவுள்ள 49வது சென்னை புத்தகக் காட்சிக்கு வாசகர்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம் என்று புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார். இப்புத்தகக் காட்சியை ஜனவரி 8ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.
பபாசி தலைவர் சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தாண்டு புத்தகக் காட்சியில் 1000க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறவுள்ளன. வாசகர்கள் அனைவரும் இலவசமாக வந்து புத்தகங்களைப் பார்வையிட்டு வாங்கலாம். பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன” என்றார்.
கடந்த ஆண்டு சோதனை முயற்சியாக டிசம்பர் இறுதியில் தொடங்கி பொங்கல் திருநாளுக்கு முன்பே புத்தகக் காட்சி நடத்தப்பட்டது. ஆனால், பல பதிப்பாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் அது வெற்றிகரமாக அமையவில்லை. இதனால், இந்தாண்டு பொங்கலை ஒட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேசத்துரோக வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு சிக்கல்! ஜனவரி 21ல் குற்றச்சாட்டு பதிவு!!

புத்தகக் காட்சியின் நேர விவரம்: வார நாள்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வார இறுதி நாள்கள் மற்றும் விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பொதுமக்கள் சென்று பார்வையிடலாம்.
சென்னை புத்தகக் காட்சி தமிழகத்தின் மிகப்பெரிய இலக்கிய நிகழ்வுகளில் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான வாசகர்கள் கலந்து கொண்டு புத்தகங்கள் வாங்குகின்றனர். இலவச அனுமதி அறிவிப்பு வாசகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய புத்தகங்கள், தள்ளுபடி விலைகள், எழுத்தாளர்களுடனான சந்திப்பு ஆகியவை இக்காட்சியின் சிறப்பம்சங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பபாசி நிர்வாகிகள் அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வருகின்றனர். வாசகர்கள் பொங்கல் பண்டிகைக்கு முன்பும் பின்பும் இப்புத்தகக் காட்சியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: கரூர் பெருந்துயரம்... தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன்...!