தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக கல்லூரி மாணவ, மாணவிகள் 10 லட்சம் பேருக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 5ம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இலவச லேப்டாப் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. இதன்பின் கொரோனா பரவல் காரணமாக இலவச லேப்டாப் திட்டத்தை கைவிட்டனர். இதனிடையே, மீண்டும் இலவச லேப்டாப் திட்டத்தை தொடங்க முடிவெடுத்த திமுக அரசு, தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து கல்லூரி மாணவர்களும் பயன்பெறும் வகையில் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும் என 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அறிவித்தது.
இந்தத் திட்டத்துக்காக ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிரபல கணினி நிறுவனங்களிடம் இருந்து தமிழக அரசின் எல்காட் நிறுவனம் டெண்டர் கோரியது. இந்தத் திட்டத்தின் முதல்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய ஹெச்பி, டெல், ஏசெர் ஆகிய 3 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான அரசாணை வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: நள்ளிரவில் செவிலியர்கள் போராட்டம்... கிளம்பாக்கத்திற்கு ஓடோடி வந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார்... மின்சாரத்தை துண்டித்து கைது...!
15 இன்ச் எல்இடி திரை, 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஹார்டு டிஸ்க், 720 பி ஹெச்டி கேமரா, ப்ளூடூத் 5.0 என நவீன வசதிகளைக் கொண்டுள்ள இந்த மடிக்கணினி ரூ.21,650-க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் செயற்கை நுண்ணறிவுக்கு (AI) ஏற்றவாறு, அதிவேக Processor மற்றும் நீண்டநேரம் தாங்கும் Battery என அத்தனை நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த லேப்டாப் உள்ளதாகவும், அமெரிக்காவின் Perplexity AI நிறுவனத்தோடு எல்காட் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, 6 மாத காலத்திற்கு Preplexity Pro AI வசதி கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளதாகவும் சில நாட்களுக்கு முன்பு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய 3 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கும் பணியை முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. எனவே ஜனவரி 5ம் தேதி சென்னை நந்தனத்தில் அரசு விழா நடத்தி கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: 1,00,008 வடையில் பிரம்மாண்ட மாலை... மிரளவைத்த நாமக்கல் ஆஞ்சநேயர்...!