நள்ளிரவில் செவிலியர்கள் போராட்டம்... கிளம்பாக்கத்திற்கு ஓடோடி வந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார்... மின்சாரத்தை துண்டித்து கைது...!
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் நள்ளிரவு நேரத்திலும் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு. செவிலியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்ற த.வெ.க. தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் பங்கேற்பு
சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் நள்ளிரவு நேரத்தில் கொட்டும் பனியையும் பொறுத்தப்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும், கொரோனா காலகட்டத்தில் பணி செய்து பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சேப்பாக்கம் சிவானந்த சாலை பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை மாலை 4 மணிக்கு பிறகு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மாநகர பேருந்து மூலமாக ஏற்றி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டனர்.
இதையும் படிங்க: 1,00,008 வடையில் பிரம்மாண்ட மாலை... மிரளவைத்த நாமக்கல் ஆஞ்சநேயர்...!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இறக்கி விடப்பட்ட நிலையில், அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லாமல் பேருந்து நிலையத்தின் நடைமேடை 9-ல் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 7 மணி முதல் போராட்டம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இரவு பத்து மணிக்கு பிறகு தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் செவிலியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செவிலியர் ஒருவரின் குழந்தையை ஆதவ் அர்ஜுனா தனது மடியில் அமர வைத்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் நள்ளிரவு இரண்டு மணிக்கு பிறகு நாளை வருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இருந்த போதிலும் செவிலியர்கள் நள்ளிரவு 2 மணியை கடந்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் நடைமேடை ஒன்பதில் படுத்து உறங்கி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தங்களுடைய 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களுடன் சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திட வலியுறுத்தி கோரிக்கை விடுத்தனர்.
கிளாம்பாக்கம் பேருந்து முனைய நிர்வாகம் திடீரென மின் இணைப்பை துண்டிப்பு செய்தது. இருந்த போதிலும் தங்களது கைகளில் இருந்த கைபேசியில் மூலம் ஒளிர செய்து தொடர்ந்து திமுக அரசை கண்டித்து கண்டன முழுகங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த போலீசார் செவிலியர்களை கைது செய்து கூடுவாஞ்சேரி பி.என்.ஆர் தனியார் திருமண மண்டபத்திற்கு பேருந்துகள் மூலம் அழைத்து சென்றனர்.
இதையும் படிங்க: "என்னை ஏன் வம்பில் இழுத்துவிடுகிறீர்கள்?" ... விஜய் பற்றிய கேள்வியால் டென்ஷன் ஆன ஓபிஎஸ்...!