விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலமூண்டி பகுதியில் கடந்த 12ஆம் தேதி அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமி காணாமல் போனார். இந்தச் சம்பவம் தொடர்பாக இன்றுடன் 23 நாட்கள் கடந்துள்ள நிலையில், சிறுமி குறித்து இதுவரை எந்தத் தடயமோ தகவலோ கிடைக்கவில்லை.
இந்த வழக்கை விழுப்புரம் மாவட்டக் காவல்துறையினர் முதலில் 10 நாட்களாக விசாரித்தனர். விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாததால், கடந்த மாதம் 21ஆம் தேதி வழக்கு சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, கடந்த 22ஆம் தேதி முதல் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோரிடம் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டபோதும், இதுவரை உறுதியான தகவல் கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: செஞ்சி சிறுமி வழக்கில் மீண்டும் தாய் மீது திரும்பிய சந்தேகம்... முக்கிய டேட்டாவை தோண்டியெடுக்க சிபிசிஐடி திட்டம்...!
இதனிடையே, சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராஜதுரையுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் ஆடுமை என்ற இளைஞரான அரவிந்தை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று, சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும், சந்தேக நபர்களின் புகைப்படங்களைத் தேநீர்க் கடைகள், உணவகங்கள் மற்றும் அருகிலுள்ள பணியிடங்களில் உள்ளவர்களிடம் காண்பித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆலமூண்டி மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களான நடுப்பட்டு, ரெட்டிப்பாளையம், திக்காமேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தேசிய அனுமதிச் சீட்டு பெற்ற லாரி ஓட்டுநர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, 13 லாரி ஓட்டுநர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஏற்கனவே கர்நாடக மாநிலம், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலும் சிபிசிஐடி போலீசார் தேடுதல் மற்றும் விசாரணை நடத்தியுள்ளனர். தற்போது சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களின் புகைப்படங்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பொதுஇடங்கள், தேநீர்க் கடைகள் உள்ளிட்ட இடங்களில் ஒட்டப்பட்டும், பொதுமக்களிடம் காண்பிக்கப்பட்டும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தீபாவளிக்கு இன்னும் இரண்டு, மூன்று நாட்களே உள்ள நிலையில், அதற்குள் சிறுமி குறித்த விசாரணையில் கூடுதல் முன்னேற்றம் ஏற்படும் என சிபிசிஐடி போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சிறுமியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கில், உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் மற்றும் அந்தப் பகுதியில் உள்ள லாரி ஓட்டுநர்களிடம் விசாரணையைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 7 வயது சிறுமி எங்கே?... தமிழகமே எதிரொலிக்கும் ஒற்றை கேள்வி... 3வது நாளாக தேடுதல் வேட்டை...!