செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போன வழக்கில்,9-வது நாளாக சிபிசிஐடி போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை-சிறுமி காணாமல் போன வழக்கில் இன்றோடு 19 நாட்கள் ஆன நிலையிலும் இதுவரை சிறுமி குறித்து எவ்வித உறுதியான தகவலும் கிடைக்காததால் சிபிசிஐடி போலீசாரும் திணறல்.
சிறுமியின் தாய் பவானியிடம் இன்று மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். சிறுமி காணாமல் போன தினத்தில் இருந்து ஒரு மாதத்திற்கு முன்பு வரை பவானி உடன் செல்போனில் பேசியவர்களின் விவரம் தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமாவதி, கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், மறுநாள் அதிகாலையில் வீட்டில் இருந்து மாயமானார். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சத்தியமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: செஞ்சி சிறுமி எங்கே?... தாய் கொடுத்த முக்கிய துப்பு... பள்ளிக்குள் நுழைந்த சிபிசிஐடி...!
ஆரம்பத்தில் பல தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சுமார் 200 போலீஸார் வரை தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சிறுமி வசித்த கிராமம் மட்டுமின்றி, சுற்றுவட்டாரப் பகுதிகள், விவசாய நிலங்கள், கிணறுகள், நீர்நிலைகள் உள்ளிட்ட இடங்களிலும் தேடுதல் நடத்தப்பட்டது. ட்ரோன்கள் மூலமாகவும் கண்காணிக்கப்பட்டதுடன், மோப்ப நாய்கள் உதவியுடன் வீடு வீடாகச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடலோரப் பகுதிகளில் தேடுவதற்காக மீனவர்களின் உதவியும் கோரப்பட்டது.
இதற்கிடையே, சிறுமி காணாமல் போன நேரத்தில் அந்தப் பகுதியில் இருந்தவர்கள் யார், சந்தேகத்துக்குரிய வகையில் யாரேனும் நடமாடினார்களா என்பதைக் கண்டறிய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. சுமார் 600 கைப்பேசி உரையாடல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
மேலும், செல்போன் டவர் சிக்னல்கள் மற்றும் அழைப்புப் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு, சம்பவம் நடந்த நேரத்தில் அந்தப் பகுதியில் இருந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. சிறுமியின் பெற்றோர், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சந்தேகத்துக்குரிய நபர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
பத்து நாட்களுக்கும் மேலாகத் தேடியும் சிறுமி குறித்த உறுதியான தகவல் கிடைக்காததால், அக்டோபர் 21-ஆம் தேதி இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள் ஆலம்பூண்டி கிராமத்திலேயே முகாமிட்டு விசாரணையைத் தீவிரப்படுத்தினர். சிறுமியின் பெற்றோரிடம் தனித்தனியாகவும், பல கட்டங்களாகவும் விசாரணை நடத்தப்பட்டது. குறிப்பாக, சிறுமி காணாமல் போனதற்கு முந்தைய நாள் நடந்த நிகழ்வுகள், பிறந்தநாள் கொண்டாட்டம், குடும்பத்தினரின் நடமாட்டம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
சிறுமி படித்த பள்ளிக்குச் சென்ற அதிகாரிகள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தியதுடன், வருகைப் பதிவேடு உள்ளிட்ட விவரங்களையும் ஆய்வு செய்தனர். சிறுமியின் சகோதரி படிக்கும் கல்லூரிக்கும் சென்று விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், பரதன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளி ராஜதுரை என்பவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். சிறுமியின் தந்தை வீட்டில் வைத்திருந்த நகை மற்றும் பணம் குறித்த தகவல் அவருக்குத் தெரிந்திருக்கலாம் என்றும், சிறுமியின் வீட்டை அவர் நோட்டமிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
அவரைச் சிறையிலிருந்து அழைத்து வந்து காவல் நிலையத்திலும், சிறுமி படித்த பள்ளி உள்ளிட்ட இடங்களிலும் வைத்து விசாரித்துள்ளனர். இதேபோல், அப்பகுதியில் உள்ள சிவன் கோயிலில் தங்கியிருந்த தஞ்சாவூரைச் சேர்ந்த ஜோதிடர் ஒருவரையும் போலீஸார் தேடி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிறுமி மாயமான நாளில் அவர் அங்கிருந்து வெளியேறியதாகவும், அவரது கைப்பேசி அணைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படும் நிலையில், அந்தக் கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.
இதற்கிடையே, சிறுமி காணாமல் போனதாகக் கூறப்படும் இரவில், அவரது வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் வசிக்கும் மூதாட்டி ஒருவரின் வீட்டுக் கதவை அடையாளம் தெரியாத நபர்கள் தட்டியதாகப் புதிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த மூதாட்டியிடமும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த நபர்கள் யார், எதற்காக நள்ளிரவில் கதவைத் தட்டினர், அதற்கும் சிறுமி மாயமான சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
கடந்த 22-ஆம் தேதி முதல் இன்று வரை 9 வது நாட்களாக சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் சிறுமியின் குடும்பத்தினர்கள், உறவினர்கள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட நபர்களிடம் சந்தேகத்தின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையிலும் இன்று வரை சிறுமி குறித்து எவ்வித உறுதியான தகவலும் கிடைக்காததால் சிபிசிஐடி போலீசாரும் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் சிறுமியின் தாய் பவானியிடம் இன்று மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக சிறுமி காணாமல் போன தினத்தில் இருந்து ஒரு மாதத்திற்கு முன்பு வரை தாய் பவானி உடன் செல்போனில் பேசியவர்களின் எண்களை சேகரித்து அவர்களின் விவரம், அவர்களிடம் எது தொடர்பாக பேசப்பட்டது என்று தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: செஞ்சி சிறுமி மாயம்...15 நாள் மர்மத்தில் திடீர் திருப்பம்... விசாரணை கோணத்தையே டோட்டலாக மாற்றிய சிபிசிஐடி...!