தமிழக அரசு ஊழியர்கள் தங்களின் சொத்து விவரங்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து அரசு ஊழியர்களும் தங்களின் அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள், சேமிப்புகள், கடன்கள் உள்ளிட்ட முழு விவரங்களையும் வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் IFHRMS எனப்படும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த உத்தரவு மாநில அரசுப் பணியாளர்களின் நடத்தை விதிகளின் கீழ் வருபவர்களுக்குப் பொருந்தும். அகில இந்திய சேவை அதிகாரிகள் மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அறிக்கை 2025ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி உள்ள சொத்து மற்றும் பொறுப்பு விவரங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அசையா சொத்துக்களில் வீடுகள், குடியிருப்பு மற்றும் வணிக மனைகள், விவசாய நிலங்கள் உள்ளிட்டவை அடங்கும். அசையும் சொத்துக்களில் வாகனங்கள், நகைகள், வங்கி வைப்புகள், முதலீடுகள் போன்றவை சேர்க்கப்பட வேண்டும். மேலும் கடன்கள் மற்றும் பிற நிதிப் பொறுப்புகளின் விவரங்களும் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.வேறு நபர்களின் பெயரில் சொத்துக்கள் இருந்தாலும் அவற்றையும் தவறாமல் அறிவிக்க வேண்டும். அத்தகைய சொத்துக்கள் யாருடைய பெயரில் உள்ளன மற்றும் அந்த நபருடன் ஊழியருக்குள்ள உறவுமுறை ஆகியவற்றையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

இது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் உள்ள சொத்துக்களையும் உள்ளடக்கியது. இதன் மூலம் வெளிப்படைத்தன்மை மேம்படும் என அரசு கருதுகிறது.முன்பு காகித வடிவிலோ அல்லது அலுவலகத்தில் நேரடியாகவோ சமர்ப்பிக்கப்பட்ட இந்த விவரங்கள் இப்போது முழுமையாக ஆன்லைனில் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். IFHRMS போர்ட்டலில் இதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஊழியர்கள் தங்களின் பயனர் அடையாளம் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி இணைந்து தேவையான படிவங்களை நிரப்பி சமர்ப்பிக்கலாம். அசையா சொத்துக்களுக்கு ஒரு படிவம், அசையும் சொத்துக்களுக்கு மற்றொரு படிவம் மற்றும் கடன்களுக்கு தனியாக ஒரு படிவம் பயன்படுத்தப்படுகிறது.காலக்கெடுவுக்குள் இந்த விவரங்களைத் தாக்கல் செய்தவர்களின் பெயர்கள் மட்டுமே பதவி உயர்வுப் பட்டியலில் இடம்பெறும் என தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கிராமிய கலைஞருக்கு அங்கீகாரம்...! தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவராகிறார் புஷ்பவனம் குப்புசாமி..!
சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யாதவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர்களின் நடத்தை விதிகளை மீறியதாகக் கருதப்படுவர். மேலும் இந்தத் தாக்கல் தேதி ஊழியரின் ஆண்டு ரகசிய அறிக்கையில் பதிவு செய்யப்படும். இது எதிர்கால பதவி உயர்வுகள் மற்றும் பிற நிர்வாக நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.இந்த நடவடிக்கை நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கும், விதிமீறல்களை எளிதாகக் கண்காணிப்பதற்கும் உதவும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31 நிலவரப்படி உள்ள விவரங்களை அடுத்த ஆண்டு மார்ச் 31க்குள் தாக்கல் செய்யும் வழக்கமான நடைமுறையும் தொடரும்.
இதையும் படிங்க: "வெற்றிப் பயணத் திட்டம்"..! ZERO TICKKET... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்ட போக்குவரத்து துறை..!!