சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது. பெரும் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஆளுநர் அரசின் கொள்கை அறிக்கையை முழுமையாக வாசித்தது கவனத்தை ஈர்த்தது.
கடந்த சில ஆண்டுகளில் ஆளுநர் உரையை மையமாகக் கொண்டு அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையே பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்தன. இதனால் இந்த முறை நடைபெறும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலும் ஏதேனும் பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால், இன்று நடைபெற்ற கூட்டத்தில் அத்தகைய சூழல் எதுவும் உருவாகவில்லை. தமிழில் வணக்கம் தெரிவித்து உரையைத் தொடங்கிய ஆளுநர், அரசால் தயாரிக்கப்பட்ட உரையை முழுமையாக வாசித்தார். எந்தவித மாற்றங்களும் இல்லாமல் அரசு கொள்கைகள் மற்றும் திட்டங்கள் அவையில் பதிவு செய்யப்பட்டன.
இதையும் படிங்க: சட்டம் ஒழுங்கு! நிதி பிரச்னைக்கு காரணம் முந்தைய அரசுதான்! திமுகவுக்கு குட்டு! கவர்னர் அர்லேகர் உரையில் தகவல்!
உரையில் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை தொடரும் என மீண்டும் வலியுறுத்தப்பட்டது. மேலும், தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான அரசின் நிலைப்பாடும் தெளிவாக பதிவு செய்யப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டதும் அரசியல் கவனத்தை பெற்ற நிகழ்வாக அமைந்தது.

மாநில நிதிநிலை தொடர்பாக அண்மையில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையின் சில முக்கிய அம்சங்களும் ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்தன. மாநிலத்தின் கடன் சுமை, வருவாய் பற்றாக்குறை மற்றும் நிதி நிர்வாகம் தொடர்பான குறிப்புகள் அவையில் வாசிக்கப்பட்டன. முந்தைய ஆட்சிக்கால நிதிநிலை குறித்து அரசின் பார்வையும் உரையில் பிரதிபலித்தது.
அரசியல் நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்தில், ஆளுநர் உரையைச் சுற்றி பெரிய சர்ச்சைகள் உருவாகாதது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதேநேரத்தில், உரையில் இடம்பெற்ற நிதிநிலை மற்றும் கொள்கை தொடர்பான கருத்துகள் வரும் நாட்களில் சட்டப்பேரவையில் தீவிர விவாதங்களுக்கு வழிவகுக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கத்திலேயே அமைதியான சூழலில் நடைபெற்றாலும், அடுத்த கட்ட விவாதங்கள் அரசியல் சூழலை மேலும் சூடுபிடிக்கச் செய்யும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதையும் படிங்க: முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து!! மு.க.ஸ்டாலின் முட்டி மோதியதை சைலண்டாக சாதித்த விஜய்!!