தமிழக நிதி அமைச்சராக இருந்தவருக்கு தன்னுடைய சொத்துக்கள் குறித்த விவரங்கள் நினைவில்லையா? என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்திடம், எம்.பி நவாஷ் கனி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைப்பெற்ற குறுக்கு விசாரணையின் போது கேள்வி எழுப்பப்பட்டது.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலி்ல் ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளரான நவாஸ்கனி, தன்னை எதிர்த்துச் சுயேச்சையாகப் போட்டியிட்ட முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்தை விட ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 782 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
அதையடுத்து நவாஸ்கனி பல்வேறு முறைகேடுகளைச் செய்து வெற்றி பெற்றுள்ளதாகவும், வேட்புமனுவில் பல உண்மைகளை மறைத்துள்ளதாகவும், எனவே நவாஸ்கனி வெற்றி பெற்றது செல்லாது என அறிவி்க்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதையும் படிங்க: டெல்லியில் ஓ.பி.எஸ் - அமித் ஷா சந்திப்பு: 20 நிமிட அவசர ஆலோசனையின் உள்நோக்கம் என்ன?
இந்த வழக்கில் ஒபிஎஸ் தரப்பில் 35 க்கும் மேற்பட்ட ஆவணங்களைத் தாக்கல் செய்து சாட்சியம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது எம்பி நவாஸ் கனி தரப்பில், ஒபிஎஸ்ஸிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. அதில் ஒபிஎஸ் தாக்கல் செய்திருந்த வேட்புமனு, அதில் குறிப்பிட்டிருந்த தொழில்கள் அதன் மூலம் கிடைத்த வருமானம் மற்றும் நிலங்கள் சொத்துக்கள் தொடர்பாகப் பல்வேறு கேள்விகள் எழுப்பட்டன.
அப்போது பால் பண்ணை வைத்திருப்பதாகவும் அதில் 40 மாடுகள் இருப்பதாகவும், அதன் மூலம் கிடைக்கும் வருவாய் குடும்ப செலவிற்காகப் பயன்படுத்தி வருவதாகவும் ஒபிஎஸ் தெரிவித்தார். மாடு வளர்ப்பு, விவசாயம், நிலங்கள் மட்டுமல்லாமல் நான் பல தொழில்கள் செய்து வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஒபிஎஸ் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள நிலங்கள் தொடர்பான கேள்விகளுக்கு நினைவில் இல்லையெனப் பதிலளித்தார் அப்போது நவாஸ் தரப்பு வழக்கறிஞர், தமிழகத்தின் நிதியமைச்சராக இருந்தவருக்கு இது நினைவில்லையா எனப் பதில் கேள்வி எழுப்பினார். அப்போது தன்னுடைய ஆடிட்டருக்கு தான் அது தெரியும் என்றார்.
தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் கோபமடைந்த ஒபிஎஸ், நான் தொடர்ந்த தேர்தல் வழக்கில் என்னை மட்டும் கேள்வி எழுப்புவது ஏன் என்றார். தான் வாங்கிய சில நிலங்கள் பஞ்சமி எனத் தெரிந்த பின் அவற்றைத் திரும்ப ஒப்படைத்து விட்டதாகவும் குறுக்கு விசாரணையின் போது பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து குறுக்கு விசாரணையை நிறைவடைய வில்லை என்பதால் வழக்கின் விசாரணை ஜனவரி 9-ம் தேதிக்கு வழக்கு விசாரணை தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தமிழகம் முழுக்க வாக்குச்சாவடிகளில் சாய்தள வசதி கட்டாயம்! – சென்னை உயர்நீதிமன்றம்