வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு விவகாரத்தில், முறையான சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் ஜனார்த்தனன் ஆணையத்தின் பரிந்துரைகள் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு ஆகியோருக்கு இடையே அனல் பறக்கும் காரசார விவாதம் வெடித்துள்ளது.
சட்டமன்றத்தில் இந்த விவகாரத்தைக் கிளப்பிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கலாம் என்று திட்டவட்டமாகப் பரிந்துரை செய்ததே நீதிபதி ஜனார்த்தனன் ஆணையம்தான்; ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என ஜனார்த்தனன் கமிட்டி கூறியதாக திமுக தரப்பில் சொல்வது முற்றிலும் தவறான செய்தி.
இதே தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத உள் இடஒதுக்கீடும், அருந்ததியின மக்களுக்கு உள் இடஒதுக்கீடும் எந்தத் தரவுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டதோ, அதே சட்டப்படியான உரிமை வன்னியர் சமுதாயத்திற்கும் உண்டு; இதனை நடைமுறைப்படுத்த திமுகவிற்கு மனம் இல்லை எனக் காட்டமாகச் சாடினார்.
இதையும் படிங்க: “ரீல்.. ரீல்” என சைகை காட்டிய எ.வ.வேலு.. சிரித்த முதல்வர் விஜய்! சட்டசபையில் நடந்த சுவாரஸ்ய தருணம்!!

சி.வி. சண்முகத்தின் குற்றச்சாட்டுக்குப் பதிலடி கொடுத்துப் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு, ஒன்றிய அரசுதான் நாடு தழுவிய அளவில் முறையான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று நீதிபதி ஜனார்த்தனன் ஆணையம் தெளிவாகத் தெரிவித்ததன் காரணமாகவே அரசு அந்த சட்ட நடைமுறைகளைப் பின்பற்றியது.
வன்னிய சமூகத்தினருக்கு வழங்கப்படும் உள் இடஒதுக்கீடு எவ்வித சட்டச் சிக்கல்களோ நீதிமன்றத் தடைகளோ இன்றி உறுதியான சட்டப் பாதுகாப்புடன் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் அன்றைக்கும் திமுகவின் நிலைப்பாடு, இன்றைக்கும் திமுகவின் நிலைப்பாடு எனத் திட்டவட்டமாக விளக்கமளித்தார்.
நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற காலகட்டம் முதலே வன்னியர் உள் இடஒதுக்கீட்டை முழுமையாக நிலைநாட்ட திமுக உறுதியுடன் சட்டப் போராட்டம் நடத்தியதைச் சுட்டிக்காட்டிய அவர், தேர்தல் ஆதாயத்திற்காக அவசரக் கோலத்தில் சட்டமியற்றி அதனை நீதிமன்றத்தால் ரத்து செய்யும் நிலைக்குத் தள்ளியது அதிமுகதான் என்றும், உரிய சட்டப் பாதுகாப்பை உருவாக்குவதே தங்களின் நோக்கம் என்றும் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜய் வசதிக்காக அலுவலகம் மாற்றமா? அமைச்சர் ஆதவ் சொன்ன முக்கிய காரணம்..!!