தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழகப் பகுதிகள் வழியாக நிலவும் வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஏழு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அரியலூர் சுத்தமல்லி அணையில் அதிகபட்சமாக 28 மி.மீ மழை பதிவாகியுள்ளது. உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும், ஈரோட்டில் அதிகபட்சமாக 39.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 10-ஆம் தேதியான இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேக பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, அரியலூர், மதுரை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழையும், செப்டம்பர் 15-ஆம் தேதி விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டி நிலவும். மீனவர்களுக்கான எச்சரிக்கையாக, அந்தமான் கடல், வடக்கு ஆந்திர கடலோரம் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் செப்டம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் அம்மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும்! சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!